உலகம்

“ரணிலுக்கு பிரதமர் பதவி கிடையாது” - சிறிசேன திட்டவட்டம்

“ரணிலுக்கு பிரதமர் பதவி கிடையாது” - சிறிசேன திட்டவட்டம்

webteam

இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி கிடையாது என அந்நாட்டு அதிபர் சிறிசேன மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை கடந்த அக்டோபர் மாதம் அதிரடியாக பதவி நீக்கம் செய்த அதிபர் சிறிசேன,  ராஜபக்சவை புதிய பிரதமராக தேர்வு செய்தார். அவரை பிரதமராக நியமிக்க சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை எனவும் தானே பிரதமராக நீடிப்பதாகவும் ரணில் தெரிவித்தார். மேலும் தனக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, ராஜபட்சவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிந்த நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக சிறிசேனா அதிரடியாக அறிவித்தார். ஆனால், ரணில் தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர். இலங்கை உச்சநீதிமன்றம், அதிபர் சிறிசேனவின் நாடாளுமன்ற கலைப்பு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து கூட்டப்பட்ட இலங்கை நாடாளுமன்ற குரல் வாக்கெடுப்பில் ராஜபக்ச தரப்பு தோல்வி அடைந்ததாக சபநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். ஆனால் அதிபர் சிறிசேன வாக்கெடுப்பை ஏற்க மறுப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று, ஐக்கிய தேசிய முன்னணி கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து இலங்கை அதிபர் சிறிசேன நிராகரித்து வருகிறார். இந்நிலையில்  இது குறித்து நேற்று தனது திட்டவட்டமான முடிவை அறிவித்தார். அதில், ''ரணில் விக்கிரமசிங்க மற்றும் சரத் பொன்சேகாவைத் தவிர்த்து வேறு எவருக்கும் பிரதமர் பதவியை வழங்கத் தயார்'' எனத் தெரிவித்துள்ளார்.  இதனால் இலங்கையின் அடுத்த பிரதமர் யார்? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.