உலகம்

'நான் கயானாவிற்கு கடத்தப்படலாம்' - மெகுல் சோக்சி அச்சம்

'நான் கயானாவிற்கு கடத்தப்படலாம்' - மெகுல் சோக்சி அச்சம்

JustinDurai
'என்னை நாடுகடத்த முயன்ற இந்திய ஏஜென்சிகளால் நான் அனுபவித்த அதிர்ச்சிகரமான அனுபவத்திலிருந்து மீளமுடியவில்லை' என்று குற்றஞ்சாட்டி உள்ளார் மெகுல் சோக்சி.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்த தொழிலதிபர் மெகுல் சோக்சி, இந்தியாவில் இருந்து தப்பி ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். அவரை நாடு கடத்தும் முயற்சியில் சிபிஐ ஈடுபட்டுள்ளது. கடந்த மே மாதம் 23ஆம் தேதி மெகுல் சோக்சி, ஆன்டிகுவாவில் இருந்து டொமினிகா நாட்டுக்கு மர்மமான முறையில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் டொமினிகா நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக அந்நாட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, உடல்நலக்குறைவு காரணமாக சோக்சிக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆன்டிகுவாவிற்கு திரும்பினார். மெகுல் சோக்சி சட்ட விரோதமாக டொமினிக்காவில் நுழைந்த வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரியில் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில் டொமினிகாவில் குடியேறுவதற்கு மெகுல் சோக்சி தடை விதிக்கப்பட்டவர் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.
இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு மெகுல் சோக்சி அளித்த பேட்டியில், "நான் தற்போது ஆன்டிகுவாவில் உள்ள எனது வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளேன். உடல்நிலை மோசமடைந்துள்ளதால் என்னால் வேறெங்கும் செல்ல முடியவில்லை. மேலும் என்னை சிறைப்பிடிக்க முயன்ற இந்திய ஏஜென்சிகளால் நான் அனுபவித்த அதிர்ச்சிகரமான அனுபவத்திலிருந்து மீளமுடியவில்லை. நான் மீண்டும் ஒருமுறை கயானாவிற்கு கட்டாயமாக நாடுகடத்தப்பட்டு அழைத்துச் செல்லப்படலாம். அங்கு இந்திய ஏஜென்சிகள் உள்ளனர். இது சட்டவிரோதமான முறையில் என்னை வெளியேற்றுவதற்குப் பயன்படுத்தப்படலாம்.
கடந்த சில மாதங்களாக நான் தொடர்ந்து பயத்தில் மூழ்கிக் கிடக்கிறேன். இதனால் நான் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். எனது மருத்துவர்களின் பரிந்துரைகளை மீறி என்னால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. எனது வழக்கறிஞர்கள் ஆன்டிகுவா மற்றும் டொமினிகாவில் எனக்கெதிரான வழக்குகளை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். நான் ஆன்டிகுவான் நாட்டு குடிமகன். இவ்வழக்கில் நான் வெற்றி பெறுவேன் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. காமன்வெல்த் நாடுகளின் சட்ட அமைப்புகளில் நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். இறுதியில் நீதி வெல்லும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார் அவர்.