கமலா ஹாரிஸை விட அதிகமான அமெரிக்க இந்தியர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3-ம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இத்தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்கி உள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்தான் தனது துணை அதிபர் வேட்பாளர் என்று ஜோ பிடன் சமீபத்தில் அறிவித்தார்.
அமெரிக்காவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க இந்தியர்கள், வாக்குரிமை பெற்றுள்ளனர். இவர்கள் பல மாகாணங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவிற்கு உள்ளனர்.
இந்நிலையில் அதிபர் டொனால்ட் பிரச்சாரத்தில் பேசுகையில், ''ஜோ பிடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவில் யாரும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள். அவரைவிட கமலா ஹாரிஸ் இன்னும் ஒருபடி மோசம். பிடன் அதிபரானால் உலக நாடுகள் அமெரிக்காவை பார்த்து சிரிக்க வாய்ப்பாக அமைந்துவிடும். பிடன் தொற்றுநோயை அரசியலாக்குவதையும், அமெரிக்க மக்கள் மீது அவமரியாதையுடன் இருப்பதையும் நாம் காண்கிறோம். அவர் இடதுசாரி அரசியலை முன்வைக்கிறார்.
மேலும் ஜோ பிடன் அமெரிக்காவின் ஒவ்வொரு காவல் துறையையும் அகற்றுவதற்கான சட்டத்தை இயற்றுவார். கமலா ஹாரிஸ் இந்திய பாரம்பரியத்தை உடையவர். ஆனால் அவரை விட அதிகமான இந்தியர்கள் எனக்கு ஆதரவாக நிற்கின்றனர்’’ என்றார்