காஸாவில் நேற்றிரவு நடைபெற்ற ராக்கெட் வீச்சில், அல் அரபு மருத்துவமனை தகர்க்கப்பட்டு சுமார் 500 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்றிரவு நடந்த ராக்கெட் குண்டுவீச்சில் காஸா நகரின் முக்கிய மருத்துவமனையானயான அல் அரபு மருத்துவமனை பற்றி எரிந்தது.
இதில், ஏற்கெனவே போரில் காயமடைந்தவர்கள், உள்நோயாளிகள் மட்டுமின்றி போருக்கு அஞ்சி மருத்துவமனையில் தஞ்சமடைந்தவர்களையும் சேர்த்து 500 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உயிருக்கு போராடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல் ஜசீரா ஊடகச் செய்தியில் சுமார் 300 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
"மருத்துவமனை மீது குண்டு வீசியது போர்க்குற்றம் என்றும் இனப்படுகொலை என்றும் கூறியுள்ள ஹமாஸ் அமைப்பு, இனியும் சர்வதேச நாடுகள் மற்றும் அரபு நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதா?" என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளது. உடனடியாக இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்த அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட விளக்கத்தில், "தங்கள் ஆய்வின்படி இஸ்ரேலை நோக்கி எதிரிகளால் ஏவப்பட்ட ராக்கெட், மருத்துவமனை வான்வெளியை கடந்தபோது இலக்கை தொலைத்து மருத்துவமனை மீது விழுந்ததற்கான பல்வேறு ஆதாரங்கள் மூலம் பெறப்பட்ட தகவல் கிடைத்திருக்கிறது” என்று கூறியுள்ளது.
இஸ்ரேல் -ஹமாஸ் இடையே 12 நாட்களாக போர் நீடிக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் செல்லவுள்ள நேரத்தில் இது நடந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.