உலகம்

இஸ்லாம் பற்றி அவதூறு: பேராசிரியர் மீதான மரண தண்டனைக்கு கண்டனம்..!

இஸ்லாம் பற்றி அவதூறு: பேராசிரியர் மீதான மரண தண்டனைக்கு கண்டனம்..!

jagadeesh

பாகிஸ்தானில் இஸ்லாம் மதம் குறித்து அவதூறாக கருத்துப் பதிவு செய்த கல்லூரிப் பேராசிரியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது நீதியின் பரிதாபம் என ஐ.நா. சபை மனித உரிமைகள் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழு கண்டித்துள்ளது.

பாகிஸ்தானின் முல்தான் நகரைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஜூனைத் ஹஃபீஸ், 2013-ஆம் ஆண்டு தமது ஃபேஸ்பக் பக்கத்தில் இஸ்லாம் மதம் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 'கடவுளை நிந்திப்பது' தொடர்பான சட்டத்தின் கீழ் அந்தப் பேராசிரியர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ‌ஜூனைத் ஹஃபீஸ்-க்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் கடந்த 2014-ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.

இதனிடையே, சிறையில் சக கைதிகளால் தொடர் தாக்குதலுக்கு ஆளாகி வந்த ஜூனைத் ஹஃபீஸ்‌, தொடர்ந்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அண்மையில் ஜூனைத் ஹஃபீஸ்-க்கு மரண தண்டனை வழங்கி பாகிஸ்தானின் கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கீழ் நீதிமன்றத்தின் மரண தண்டனை, நீதியின் பரிதாபம் என ஐ.நா. சபை மனித உரிமைகள் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. ஜூனைத் ஹஃபீஸ்-க்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என பாகிஸ்தான் அரசை வலியுறுத்தியுள்ளதாக அந்தக் குழு கூறியிருக்கிறது.