ட்ரில்லியன் டன் எடையுள்ள, மிக பிரம்மாண்டமான பனிப்பாறை அண்டார்டிகாவில் உடைந்துள்ளது. இந்தப் பாறை பல வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து வந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த பனிப்பாறை சுமார் 5800 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. அதாவது அமெரிக்காவின் மாகாணமான டெலாவரை விடப் பெரியது. இந்தப்பாறை 350 மீட்டர் தடிமனானது. இது ட்ரில்லியன் டன்-க்கும் அதிகமான எடை கொண்டது. இதுவரை உடைந்த பனிப்பாறகளிலேயே இதுதான் பெரியது எனினும் ஏற்கனவே மிதந்தபடி இருந்ததால், பெரிய ஆபத்து எதுவுமில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எனினும் கப்பல் போக்குவரத்துக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதா எனத் தெரிந்து கொள்ள இந்தப் பாறையின் நகர்வை ஆய்வாளர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
லார்சன் சி பனிப்பாறை பகுதியில் தற்போது உடைந்துள்ள இந்தப் பாறை 12 சதவீதம் ஆகும். இந்தப் பனிப்பாறை முழுவதும் கரையும் போது, கடல் நீர் மட்டத்தை 10 சென்டிமீட்டர் வரை உயர வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். பூமி வெப்பமடைவதே இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.