அமெரிக்காவின் புளோரிடா மாகாண துப்பாக்கிச் சூட்டில், அமெரிக்க வாழ் இந்திய ஆசிரியை துரிதமாக செயல்பட்டு தனது மாணவர்களை துப்பாக்கிச் சூட்டில் இருந்து பாதுகாத்துள்ளார்.
புளோரிடா மாகாணத்தில் உள்ள மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலை பள்ளியில் கடந்த 14-ம் தேதி துப்பாக்கியுடன் நுழைந்த முன்னாள் மாணவன் நிகோலஸ் குரூஸ் (19) நடத்திய கோர தாக்குதலுக்கு 17 மாணவர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டிருந்த நிகோலஸ் குரூஸ், தாக்குதலை நடத்திவிட்டு கூட்டத்தோடு கூட்டமாக மாணவர்களோடு கலைந்து சென்று தப்பிவிட்டான். பின்னர் போலீசார் அவனை கைது செய்துவிட்டனர்.
இந்தச் சம்பவத்தில், அந்தப் பள்ளியில் பணிபுரிந்த அமெரிக்க வாழ் இந்திய ஆசிரியை சாந்தி விஸ்வநாதன் என்பவர் தைரியத்துடன் செயல்பட்டு தனது வகுப்பு மாணவர்களை காப்பாற்றியுள்ளார். சாந்தி கணித ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். துப்பாக்கிச் சூடு அன்று அவர் அல்ஜீபிரா வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது முதலில் ஒரு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதும் அவர் உஷாராகியுள்ளார். மாணவர்களை வெளியே கூட்டிக் கொண்டு ஓடுவதைவிட பள்ளி அறைக்குள்ளாகவே பதுங்கிவிடுவது நல்லது என்று எண்ணியுள்ளார். உடனடியாக அறைக்கதவின் உட்பக்கம் தாளிட்ட அவர், மாணவர்களை அறையின் மூலைகளில் பதுங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அதேபோல், ஜன்னல்களையும் பேப்பர்களால் மூடி, உள்ளே இருப்பவர்கள் தெரியாத அளவிற்கு செய்துள்ளார்.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், போலீசாரே வந்து கதவை தட்டிய போதும், அவர் கதவை திறக்கவில்லை. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர்தான் திறக்க சொல்கிறானோ என்று நினைத்து திறக்கமாட்டேன் என்று கூறிவிட்டார். கதவை உடைத்து திறந்து கொள்ளுங்கள் அல்லது சாவியை வைத்து திறந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார் சாந்தி. அதனால், வேறுவழியில்லாமல் போலீசார் கதவை உடைத்துதான் திறக்க வேண்டியிருந்தது.
துரிதமாக செயல்பட்டு தனது மாணவர்களை காப்பாற்றிய இந்திய ஆசிரியை சாந்திக்கு, மாணவர்களின் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். அவரது செயல்பாடு குறித்து பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின. சாந்தி ஆசிரியை விரைந்து செயல்பட்டு, தனது அறிவை பயன்படுத்தினார். நிறைய குழந்தைகளைக் காப்பாற்றினார் என்று அவரது மாணவர் ஒருவரின் தாய் கூறினார்.