hamas pt web
உலகம்

36 ஆண்டுகளுக்கு முன் துண்டுப் பிரசுரம் வழங்கி வந்த ஹமாஸ் அமைப்பு.. குட்டி ராணுவமாக வளர்ந்தது எப்படி?

இஸ்ரேலிய பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய ஹமாசை முற்றிலும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது இஸ்ரேல். இந்நிலையில் ஹமாஸ் ஒரு குட்டி ராணுவமாக வளர்ந்தது எப்படி? பார்க்கலாம் இந்தத் தொகுப்பில்..

PT WEB

துண்டு பிரசுரம் டூ மினி ராணுவம்

36 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை வழங்கிக் கொண்டிருந்த அமைப்புதான் ஹமாஸ். அப்போது எந்த அங்கீகாரமும் இல்லாமல் இருந்த ஹமாஸ்தான் தற்போது மினி ராணுவமாக இயங்கி இஸ்ரேலிய பகுதிகள் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது. சைபர் செக்யூரிட்டி தொடங்கி, கடற்படை கமாண்டோ வரை சுமார் 40 ஆயிரம் பேரைக் கொண்ட ராணுவப் பிரிவைக் கொண்டிருக்கிறது ஹமாஸ்.

ஹமாஸின் தொடர் வளர்ச்சி

1990களில் ஹமாசிடம் இருந்தது பத்தாயிரத்திற்கும் குறைவான நபர்களே. 2000ஆண்டுகளின் தொடக்கக் கட்டத்தில் காசாவில் பாதாள வழிகளை ஏற்படுத்தியது ஹமாஸ். வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை கொண்டு வரவும், ஆயுதக்கிடங்குகளுக்கு கொண்டு செல்லவும் இந்த வழிகளை ஹமாஸ் பயன்படுத்தியது. 2008 ஆம் ஆண்டு காசா போரின்போது ஹமாஸ் பயன்படுத்திய ராக்கெட்டின் ரேஞ்ச் 40 கிலோமீட்டர். அதே 2021 சண்டையின் போது ஹமாஸ் 230 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்ட ராக்கெட்டுகளை பயன்படுத்தியது. ஆயுத ரீதியாக பலம் பெற்று வந்த ஹமாஸ், 2008 ஆம் ஆண்டு இஸ்ரேலிய வீரர்கள் 9 பேரைக் கொன்றது. 2014 ல் இந்த எண்ணிக்கை 66 ஆக உயர்ந்தது.

காசாவே ஆதாரப்புள்ளி

இஸ்ரேலிய எதிர்ப்புக்காக உருவாக்கப்பட்ட ஹமாசை தீவிரவாத அமைப்பாக இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், கனடா, எகிப்து, ஜப்பான் நாடுகள் அறிவித்துள்ளன. ஹமாசின் தலைவர்கள் லெபனான், கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பரவியுள்ளனர். ஆனால், காசாதான் ஹமாசின் ஆதாரப்புள்ளியாக இருக்கிறது. ஈரான் மற்றும் லெபனானின் ஹெஸ்புல்லா போன்ற அமைப்புகளிடம் இருந்து நிதி, ஆயுதப் பயிற்சி பெற்று வளர்ந்துள்ள ஹமாஸ், கடந்த 7 ஆம் தேதி பாராகிளைடர்கள், மோட்டார் சைக்கிள், கார்கள் போன்ற வாகனங்களைப் பயன்படுத்தி 2500 ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேலிய பகுதி மீது தாக்குதலை நடத்தியுள்ளது.

ஈரானே நிதிஆதாரம்; குற்றம்சாட்டும் யு.எஸ்

ஹமாசின் பின்னணியில் இருந்தாலும், அக்டோபர் 7 தாக்குதலில் தங்களுக்கு பங்கில்லை என்று ஈரான் கூறியுள்ளது. தாங்களே ராக்கெட் தயாரிக்கும் தொழில்நுட்பங்களுடன் இருந்தாலும், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ராக்கெட்டுகள் ஈரான், சிரியா நாடுகளிடம் இருந்தும் எகிப்து வழியாக பிற நாடுகளில் இருந்தும் பெற்றதாக ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே (ISMAIL HANIYEH) கடந்த ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அமெரிக்கா அளிக்கும் தகவலின்படி, பாலஸ்தீனத்தில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் 100 மில்லியன் டாலர் அளவுக்கு ஈரான் நிதி உதவி அளித்து வருகிறது. கடந்த ஆண்டு முதல் ஹமாசுக்கு மட்டும் 350 மில்லியன் டாலர் நிதி உதவியை ஈரான் அளித்துள்ளது.

ஹமாஸ் உருவாக காரணம் என்ன?

ஹமாஸ் என்றால் அரபு மொழியில் வைராக்கியம் என்று பொருள். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. காசாவில் தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனத்தை, இஸ்ரேலிய ராணுவ டிரக் இடித்து நொறுக்கியதில் அதில் இருந்த 4 பாலஸ்தீனர்களும் கொல்லப்பட்டனர். இதுதான் ஹமாஸ் இயக்கம் உருவாகக் காரணமாக அமைந்தது. ஷேக் அகமது யாசின் தலைமையில் நடந்த கூட்டத்தில் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதுதான் ஹமாசின் முதல் போராட்டம்.

2005ல் காசாவில் இருந்து இஸ்ரேல் திரும்பப் பெற்றபின், ஈரான் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யும் வேலைகளில் ஹமாஸ் இறங்கியது. அதன்பிறகு ஹமாஸ் கண்ட வளர்ச்சிதான் அக்டோபர் 7 ஆம் தேதி தாக்குதலில் வெளிப்பட்டது. இந்த தாக்குதலின் நோக்கம், இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 5 ஆயிரம் பாலஸ்தீனர்களை விடுதலை செய்வது, அல் அக்சா மசூதி மீது இஸ்ரேலிய தாக்குதல்களை நிறுத்துவது, காசாவில் 16 ஆண்டுகளாக தொடரும் முற்றுகையை நீக்குவது ஆகிய 3 நோக்கங்களுக்காக என்று கூறுகிறார் ஹமாஸ் அதிகாரி பராகா ( BARAKA) இஸ்ரேலுடன் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் இணைந்தால், இந்த போர் ஒரு பிராந்திய போராக இல்லாமல் பெரிதாக உருவெடுக்கும் என்றும் ஹமாஸ் எச்சரித்திருக்கிறது.