ஷேக் ஹசீனா தப்பி செல்லும் காட்சிகள் pt web
உலகம்

வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா இந்தியாவிற்குள் நுழைந்தது எப்படி?

வங்கதேசத்திலிருந்து ஷேக் ஹசீனா எப்படி இந்தியாவுக்குள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டார் என்பது குறித்த சுவாரசியமான தகவங்கள் வெளியாகியுள்ளன.

PT WEB

ஷேக் ஹசீனாவிற்கு எதிராக வங்கதேசத்தில் நிலவிய கொந்தளிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கடந்த சில நாட்களுக்கு முன் உச்சக்கட்டத்தை எட்டியது. போராட்டக்காரர்கள் அனைவரும் தலைநகர் தாகாவை நோக்கி குவிய அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பிரச்னை தீவிரமடைந்தது.

இந்நிலையில்தான் ராணுவத்தின் வலியுறுத்தலுக்கு அடிபணிந்து பிரதமர் பதவியை உதறினார் ஷேக் ஹசீனா. வங்கதேசத்தில் இப்படி சூழல்கள் அதிவேகமாக மாறிய நிலையில் அந்நாட்டு வான் பரப்பை ரேடார்களை கொண்டு கண்காணிக்கும் பணியை தொடங்கியது இந்தியா.

தாகாவிலிருந்து ஒரு விமானம் புறப்பட்ட நிலையில் அது இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டது. அந்த விமானம் இந்திய வான் பரப்பில் நுழைந்தவுடன் ஹஷிமாரா படைத்தளத்தை சேர்ந்த 2 ரஃபேல் விமானங்கள் பாதுகாப்பு அளித்தவாறே பறந்துவந்தன.

வங்கதேசத்திலிருந்து வந்த விமானத்தின் பாதை ஒரு நொடி இடைவெளியின்றி கண்காணிக்கப்பட்டது. விமானப்படைத்தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுத்ரியே நிலைமையை நேரடியாக கையாண்டதாகவும் தகவல்கள் உள்ளன. உளவுத்துறையினரும் தொடர்ந்து தகவல்களை அளித்து உஷார்படுத்தினர்.

இப்படி சில மணி நேர பரபரப்பான பயணத்திற்கு பின்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படைத்தளத்தில் ஷேக் ஹசீனாவை ஏற்றிவந்த அவ்விமானம் மிகமிக பாதுகாப்பாக தரையிறங்கியது. இதன் பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஷேக் ஹசீனாவுடன் அவரது அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் பிரதமரிடம் அவற்றை விவரித்தார்.