உலகம்

சைப்ரஸில் மட்டும் எப்படி இத்தனை லட்சம் பூனைகள் வந்தது? சுவாரஸ்ய பின்னணி தெரியுமா?

JananiGovindhan

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சிறப்பான, தனித்துவமான பாரம்பரிய கலாசார அடையாளங்கள் உண்டு. அது உணவு, பழக்கவழக்கம், வாழ்க்கை முறை என பலவற்றோடு வேறுபடும். அந்த வகையில் ஒரு நாடே பூனைக்கு பிரபலமான நாடாக ஒன்று விளங்குகிறது. அதில் என்ன அதிசயம் இருக்கு? எல்லா நாட்டிலும்தான் பூனை இருக்கு என கேள்விகள் எழலாம். ஆனால் தீவாக உள்ள இந்த நாட்டில் மனிதர்களின் எண்ணிக்கையை காட்டிலும் பூனைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனக் கூறினால் அது சிறப்பானதாகத்தானே இருக்கும்?

ஆம். ஐரோப்பிய ஒன்றியங்களில் உள்ள சைப்ரஸ் நாட்டை பற்றிதான் தற்போது காணவிருக்கிறோம். இது மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனானில் இருந்து சிறிது தொலைவில் உள்ள நாடுதான் இந்த சைப்ரஸ்.

இந்த சைப்ரஸ் நாட்டில் வீடுகள், தெருக்கள், கல்வி நிலையங்கள் என காணும் இடங்களில் எல்லாம் பூனைகளை காணமுடியும். பிரேசில் நாட்டில் உள்ள Ilha da Quemada Grande என்ற பகுதி எப்படி பாம்புகளுக்கான தீவாக இருக்கிறதோ அப்படிதான் பூனைகளுக்கு சைப்ரஸ்.

இங்கு 1.5 மில்லியன் பூனைகள் இருக்கின்றன. ஆனால் சைப்ரஸின் மொத்த மக்கள் தொகையே 1.2 மில்லியந்தான். அதாவது 12 லட்சம் பேர்.

சைப்ரஸில் உள்ள பூனைகள் பெரும்பாலும் அனைத்து மக்களாலும் விருப்பப்பட்டு வளர்க்கப்படும், பேணிக்காக்கப்படும் பிராணியாக இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் ஏராளமான பூனைகளை அந்நாட்டு மக்கள் வளர்க்கிறார்களாம். அவற்றால் எந்த குடைச்சலையும் அவர்கள் சந்தித்தது இல்லை என்றும் கூறுகிறார்கள்.

நீச்சல் குளம், பார், ஹோட்டல் அல்லது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெளியே பூனைகள் விருந்துக்காகக் காத்திருப்பதைக் காணலாம் என செய்தி நிறுவனங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

சைப்ரஸில் மட்டும் எப்படி இத்தனை பூனைகள்?

கி.பி. 328ல் ரோம் நாட்டு பேரரசியான செயின்ட் ஹெலீனா தனது ராஜ்ஜியத்தில் இருந்த பாம்புகளை விரட்டுவதற்காக நூற்றுக்கணக்கான பூனைகளை எகிப்தில் இருந்து கொண்டு வந்ததாக ஒரு தகவல் கூறப்படுகிறது.

இதுபோக தொல்லியல்துறை ஆய்வாளர்களின் கூற்றுப்படி கி.மு.7500ல் மனிதர்களின் கல்லறைகளில் பூனைகளும் புதைக்கப்பட்டது கண்டெடுக்கப்பட்டதாகவும் இது ரோம் பேரரசி ஹெலீனாவின் செயலுக்கு முன்பே நடந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி இருக்கையில் பழங்காலத்தில் கொறித்திண்ணிகளை விரட்டுவதற்காக பூனைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் கடந்த 2007ல் மற்றொரு கருத்தாக்கமும் பரப்பப்பட்டது. எது எப்படியோ பூனைகளின் சொர்க்கபுரியாக சைப்ரஸ் நாடு இருப்பதை எவராலும் தற்போது மறுத்துவிட முடியாது என்பது திண்ணம்.

ALSO READ: