இங்கிலாந்தில் மருத்துவமனையின் அலட்சியத்தால் இறந்து பிறந்த குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல் பெற்றோர் ஃப்ரிட்ஜில் வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதியர் லாரன்ஸ் வைட் - லாரா பிராடி. கருவுற்றிருந்த லாராவுக்கு எதிர்பாராதவிதமாக கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. வலியால் லாரா துடித்த நிலையில் இருவரும் லூயிஷாமில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு ஏற்கனவே 20க்கும் மேற்பட்டவர்கள் மூச்சுத்திணறல், பிரசவத்திற்காக காத்திருந்ததால் லாராவுக்கு படுக்கை கிடைக்கவில்லை.
மருத்துவமனை ஊழியர் லாராவிடம் வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த லாரா, கழிவறையில் இறந்த சிசுவை ஈன்றுள்ளார். சிசுவின் உடலை ஒரு டப்பாவில் போட்டு மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் சிசு பிறந்ததற்கு சரியான ஆவணம் கொடுத்தால் மட்டுமே உடலை பிணவறைக்கு அனுப்புவோம் என்று கூறியுள்ளனர்.
குழந்தை உடல் இருந்த டப்பாவை ஊழியர்கள் தள்ளிவிட, ஆத்திரமடைந்த லாரா அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து ஃப்ரிட்ஜில் குழந்தையின் உடலை வைத்தார். ஊழியர்கள் தனது குழந்தையின் உடலை ஒரு குப்பையை போல கையாண்டதாக லாரா குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளது.