உலகம்

ஸ்பெயினிடம் இருந்து பிரியத் துடிக்கும் கேட்டலோனியாவின் விடுதலைப் போராட்ட வரலாறு

ஸ்பெயினிடம் இருந்து பிரியத் துடிக்கும் கேட்டலோனியாவின் விடுதலைப் போராட்ட வரலாறு

webteam

தனித்தன்மையான பண்பாட்டையும், பழக்கவழங்கங்களையும் கொண்ட கேட்டலோனியாவின் 400 ஆண்டுகளாக விடுதலை குரல்கள் ஒலித்து வருகின்றன.

ஸ்பெயின் நாட்டின் பிராந்தியமான கேட்டலோனியாவின் விடுதலைப் போராட்டங்கள் சுமார் நானூறு ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது. கேட்டோலோனியா என்ற பிராந்தியத்தின் ஒரு பகுதி பிரான்ஸ் நாட்டில் இருந்தாலும், ஸ்பெயினின் கேட்டலோனிய பிராந்தியம்தான் அதிக விடுதலைப் போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தப் பிராந்தியத்தில் விடுதலைப் போராட்டங்கள் எழுச்சி பெற்றதன் காரணமாக இந்தப் பிராந்தியத்துக்கு அதிக அதிகாரங்களைக் கொண்ட தன்னாட்சி வழங்கப்பட்டது. ஆனால், 2010 ஆம் ஆண்டில் ஸ்பெயினின் அரசியல் சாசன நீதிமன்றம் கேட்டலோனியாவின் தன்னாட்சி தொடர்பான சில சட்டப் பிரிவுகளை நீக்கியதால், மீண்டும் விடுதலைப் போராட்டங்கள் தொடங்கின.

கேட்டலோனியாவின் வரலாற்றையும், தனித்தன்மையையும் போற்றும் வகையில் அதைத் தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. 2010 ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி பார்சிலோனா நகரத்தில் நடந்த பிரம்மாண்டமான போராட்டத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். இதே போன்றதொரு போராட்டம், அரபு எழுச்சி உச்சத்தில் இருந்த 2012 ஆம் ஆண்டிலும் நடந்தது. கேட்டலோனியாவின் முக்கியமான அரசுக் கட்டடங்களை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்தார்கள்.

இத்தகைய போராட்டங்களைத் தொடர்ந்து விடுதலை தொடர்பான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் கேட்டலோனிய நாடாளுமன்றத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. தனி மொழி, பண்பாடு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் கேட்டலோனியா, ஸ்பெயினின் மொத்தப் பொருளாதார வளத்தில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டிருப்பதால், தனி நாடாக இயங்குவதில் பெருந்தடை ஏதுமிருக்காது என்ற நம்பிக்கையைப் பிரிவினை கோருவோரின் மத்தியில் காண முடிகிறது.