உலகம்

கொத்து கொத்தாக சாகும் மனிதர்கள்...! பிணங்களை சுமக்கும் ஹார்ட் தீவு...!

கொத்து கொத்தாக சாகும் மனிதர்கள்...! பிணங்களை சுமக்கும் ஹார்ட் தீவு...!

subramani

மரணத்தை உணர்வு நிலையில் அணுகுவதை விடவும் தத்துவார்த்த நிலையில் நின்று அணுகும் போது கிடைக்கும் ஆறுதல் இதம். ஆனால், மரணத்தை எளிய மனிதர்கள்
அனைவராலும் தத்துவமாக பார்க்க இயலாது. வாழ்வு குறித்த அனுபவத் தீ தீண்டாத வரை மனதிற்கு மரணம் என்பது துன்பமேயன்றி வேறில்லை. தற்போது கொரோனா
யுத்தத்தில் கொத்து கொத்தாக மனிதர்கள் செத்து விழும் துயர காலத்தை நாம் கடந்து கொண்டிருக்கிறோம். காலமானது கேலரி ரசிகனாக அமர்ந்து இந்த காட்சிகளை
எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறது. கொரோனா எனும் வைரஸால் உலகமே திறந்தவெளி சவக்கிடங்காக மாறிவிடுமோ என ஒருபுறம் அஞ்சினாலும். இதுவும் கடந்து
போகும் என்ற நம்பிக்கையில் நாம் ஒவ்வொருவரும் இந்நோயை எதிர்த்து போராடி வருகிறோம்.

வளர்ந்த நாடுகள் பலவும் தற்போது இந்நோயின் கோர பிடியில் சிக்கியுள்ளது. சர்வ பலம் கொண்ட நாடாக தன்னை கருதும் அமெரிக்காவின் கெண்டைக் கால் நரம்பில் அடி
விழுந்திருக்கிறது. அந்நாட்டில் செத்து விழும் மனிதர்கள் கொத்து கொத்தாக புதைக்கப்படுகிறார்கள். அமெரிக்காவின் நியூயார்க் அருகில் உள்ளது ஹார்ட் தீவு. 131 ஏக்கர்
பரப்பளவுள்ள இந்தத் தீவு தான் தற்போது கொரோனாவால் சாகும் மனிதர்களது பிணங்களை புதைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1869 முதல் தற்போது வரை பத்து லட்சம்
பிணங்கள் ஹார்ட் தீவில் புதைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 2014 வரை அத்தீவில் குடிமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. உரிமை கோரப்படாத கேட்பார்
அற்றுப் போகும் பிணங்களே இத்தீவில் புதைக்கப்படும்.

நவம்பர் 14, 2019 அன்று நியூயார்க் நகர சபையானது ஹார்ட் தீவை பொதுமக்கள் பார்வையிடவும், வந்து போகவும் ஒரு பூங்கா அமைக்கலாம் என பரிந்துரைத்தது. அத்தீவின்
150 ஆண்டு கால கெடுபிடிகள் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில் ஹார்ட் தீவை பொது மக்கள் பார்வையிட ஜூலை 1, 2021 முதல்
அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய சூழலில் கொரோனாவால் உயிரிழப்போர் பலரும் அங்கு கொத்து கொத்தாக புதைக்கப்பட்டு
வருகின்றனர். ஒரு நாளைக்கு 25 பிணங்கள் வரை அங்கு புதைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹார்ட் தீவின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் அந்நிலம் குறித்த பல தகவல் கிடைக்கின்றன. கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு புதைக்கப்பட்டவர்களில்
50,000-க்கும் அதிகமானோரின் விவரங்கள் அந்த இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இறந்தவர்கள் தீவின் எந்தப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரமும்
அதில் கிடைக்கிறது. பிணங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணைக் கொண்டு நாம் அந்த இணைய தளத்தில் விவரங்களைப் பெறலாம் என்றாலும் பலரது பிணக்
குறியீட்டு எண் இங்கு புதைக்கப்பட்டிருப்பது அநாதைப் பிணம் என்றே அறிவிக்கிறது.

1980 - 90’களில் அமெரிக்காவில் எயிட்ஸ் நோயால் பலர் உயிரிழந்தனர். எயிட்ஸ் நோய் குறித்து பெரியளவில் விழிப்புணர்வு எட்டப்படாத அச்சமயத்தில் அந்நோயால்
இறந்த பலரும் ஹார்ட் தீவில் புதைக்கப்பட்டனர். எயிட்ஸ் நோயால் இறந்தவர்களின் கல்லறையானது ஹார்ட் தீவின் இணைய தளத்தில் சிவப்பு நிறத்தில்
குறிக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதிக்குள் நுழைய தற்போது வரை யாருக்கும் அனுமதி இல்லை.

1985 - 86 காலகட்டத்தில் எயிட்ஸ் நோயால் இறந்தவர்கள் தனித் தனி கல்லறைகளில் அங்கு புதைக்கப்பட்டனர். அச்சத்தின் காரணமாக 14 அடி வரை ஆழமாக குழி
தோண்டப்பட்டு எயிட்ஸ் நோயாளிகளை புதைத்தனர். 1992’ல் புகைப்படக் கலைஞர்கள் ஜோயில் ஸ்ட்ரன்பீல்டு மற்றும் மெலிண்டா ஹண்ட் ஆகியோர் ஹார்ட் தீவில்
புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டனர். எயிட்ஸ் நோயால் இறந்து போன நியூயார்க்கின் முதல் குழந்தை ஹார்ட் தீவில் புதைக்கப்பட்டது. அதை அப்புகைப்படக்
கலைஞர்கள் புகைப்படமெடுத்தனர்.

David Lang இசையில் உருவான பாடலொன்று ஹார்ட் தீவின் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. just என்ற அப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் இதுவரை
வாழ்க்கை மீது உங்களுக்கு இருந்த ஆணவ அபிமான கோணத்தை அசைத்துப் பார்க்கும். “Loneliness in a beautiful place” என்ற வரி அந்த பாடல் வீடியோவில்
சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆம் தனிமை அழகானது தான். தற்போது உலகை அச்சுறுத்தும் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் கூட கொஞ்ச காலம்
தனிமை வைத்தியம் நமக்கெல்லாம் அவசியப்படுகிறது.