வங்கதேசம் எக்ஸ் தளம்
உலகம்

வங்கதேசம்|வன்முறையை எதிர்கொள்ளும் இந்துக்கள்.. இடைக்கால அரசு சொல்வது என்ன? கிடைக்குமா தீர்வு?

வங்கதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினர்களாகிய தங்களின் வீடுகள், கடைகள், கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதை கண்டித்து தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Prakash J

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. குறிப்பாக, பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியது அரசையே கலங்கடித்தது.

இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். அவருடன் இடைக்கால அரசின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் 16 பேர் பதவியேற்றனர். மாணவர்களும், பொதுமக்களும் வன்முறையை கைவிட வேண்டும் என இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் வேண்டுகோள் விடுத்தார்.

என்றாலும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் விசுவாசியாக கருதப்படும் வங்கதேச உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஒபய்துல் ஹாசன் மற்றும் மூத்த நீதிபதிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர் அமைப்பின் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்காக அவர்கள் உச்ச நீதிமன்ற வளாகத்தை முற்றுகையிட்டனர். மாணவர்கள் போராட்டம் நடத்தி நெருக்கடி கொடுத்ததால், தான் பதவி விலகுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒபய்துல் அறிவித்தார்.

இதையும் படிக்க: ‘அந்த ஆண்டில் பிறந்தவர்கள் வேண்டாம்’ - வேலை கொடுக்க கண்டிஷன்போட்ட சீன நிறுவனம்.. ஏன் தெரியுமா?

இதற்கிடையே ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரை குறிவைத்து தாக்குதல்கள் நடந்துவருகின்றன. அவாமி லீக் கட்சியினர் பலர் சிறுபான்மையினர் என்பதால் அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது அதிகரித்துள்ளது. வங்கதேசத்தில் பிரதமர் பதவியிலிருந்து ஷெக் ஹசீனா விலகிய பின், நாடு முழுவதும் 52 மாவட்டங்களில் அங்கு சிறுபான்மையின பிரிவைச் சேர்ந்த இந்து, கிறிஸ்தவ, புத்த மதத்தினரைக் குறிவைத்து குறைந்தபட்சம் 200க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

அசாதாரண சூழல் நிலவுவதைத் தொடர்ந்து, வங்கதேசத்திலிருந்து ஆயிரக்கணக்கான இந்துக்கள் இந்தியாவுக்குள் நுழைவதற்காக இருநாட்டு எல்லைப் பகுதிகளில் திரண்டிருப்பதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதையடுத்து, வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தியுள்ளாா். மேலும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நிலவரத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 5 பந்திலும் 5 சிக்ஸர்.. ரஷித் கான் ஓவரில் ருத்ர தாண்டவம் ஆடிய கிரன் பொல்லார்ட்!

இதனிடையே வங்கதேச தலைநகரான டாக்கா மற்றும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான சிட்டகாங்கில் லட்சக்கணக்கான மக்கள் மாபெரும் பேரணியில் கலந்து கொண்டனர். இந்துக்கள் சிறுபான்மையினர்களாகிய தங்களின் வீடுகள், கடைகள், கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதை கண்டித்து தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது, ‘இந்துக்களை காப்பாற்றுங்கள்’ என முழக்கமிட்டதை காண முடிந்தது. இந்துக்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டம் தொடருமென அவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நாடாளுமன்றத்தில் சிறுபான்மையிருக்கான 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றுள்ள முகமது யூனுஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ஒவ்வொரு நபரும் நமது சகோதரர்கள். அவர்களைப் பாதுகாப்பதே எங்களின் தற்போதைய முக்கிய பணி’’ என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அமெரிக்க அதிபர் தேர்தல்| ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் நேரடி விவாதம்.. கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன?