உலகம்

ஹிஜாபை எரித்தும், தலை முடியை வெட்டியும் ஈரானில் பெண்கள் போராட்டம் - காரணம் என்ன?

ஹிஜாபை எரித்தும், தலை முடியை வெட்டியும் ஈரானில் பெண்கள் போராட்டம் - காரணம் என்ன?

Abinaya

ஈரானில் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று கடந்த 13ம் தேதி Morality Police என்கிற காவல்துறை பிரிவால் கைதுசெய்யப்பட்ட 22 வயதான மஹ்ஸா அமினி என்ற பெண், காவலில் இருக்கும் போது மரணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவலிலிருந்த பெண், மரணித்த சம்பவத்தைத் தொடர்ந்து பலவேறு இடங்களில் போராட்டம் வெடித்து வருகிறது. காவலில் இருக்கும் போது மஹ்ஸா அமினிக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மரணித்ததாக காவல்துறை தரப்பால் கூறப்பட்டாலும், மஹ்ஸா அமினிக்கு இதயம் தொடர்பான நோய்கள் எதுவும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது எப்படி மாரடைப்பு வரும் என்று மஹ்ஸா அமினியின் தரப்பு கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் சில அறிக்கைகள், மஹ்ஸா அமினி கைது செய்யப்பட்ட பின்பு கோமா நிலைக்குச் சென்றதாகவும், அதன் பிறகு மாரடைப்பு ஏற்பட்டுத் தான் இறந்தார் என்றும் தெரிவிக்கிறது.

இந்நிலையில், ஈரானின் Morality Police என்கிற காவல்துறை பிரிவு, ஆடைக்கட்டுப்பாடு என்கிற பெயரில் குறிப்பாக இளம்பெண்களைத் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருவது குறித்தும் தற்போது கண்டனங்கள் எழுந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மஹ்சா அமினியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிஜாபை எரித்தும், முடியை வெட்டியும் போராட்டத்தில் ஈட்டுப்பட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் குறித்து வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் ஈரானிய பெண்களை வெகுவாக பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், ‘ ஈரானிய பெண்களின் எதிர்ப்பிலிருந்து உலகெங்கிலும் உள்ள பெண்களுக்குத் தைரியத்தைச் சேர்க்கும். ஹிஜாபை எரித்தும், தலைமுடியை வெட்டியும் எதிர்ப்பது அழகான காட்சி. இது உலகிற்கு, அனைத்து முஸ்லீம் பெண்களுக்கும் மிகவும் முக்கியமானது, ஏனென்றால் ஹிஜாப் என்பது பெண்களை அடக்குதல், ஒடுக்குதல், இழிவுபடுத்துதல் மற்றும் அவமானப்படுத்துதல் ஆகியவற்றின் சின்னம் என்பதை நாங்கள் அறிவோம், ஈரானிய பெண்கள் தொடங்கி இருக்கும் இந்த எதிர்ப்பு முக்கியமானதாக நான் பார்க்கிறேன். உலகம் முழுவதும் உள்ள பெண்களும் தங்கள் ஹிஜாபை எரித்து ஹிஜாப் முறைக்கு எதிராகப் போராட வேண்டும்.’ என்றார்.

ஹிஜாப் அணிவதைத் தேர்வு செய்வது பெண்களிடமே இருக்க வேண்டுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த தஸ்லிமா நஸ்ரீன், “ஹிஜாப் அணிய விரும்புபவர்களுக்கு அதற்கான உரிமை இருக்க வேண்டும். ஆனால், விரும்பாதவர்களுக்கு ஹிஜாப் அணியாமல் இருக்கவும் உரிமை இருக்க வேண்டும். பெரும்பான்மையான இஸ்லாமியப் பெண்களுக்கு ஹிஜாப் ஒரு தேர்வாக இருப்பதில்லை. குடும்ப அழுத்தம், பயம் மற்றும் வளர்ப்பு ஆகியவை அவர்களின் மனநிலையை வடிவமைப்பதில் பங்கு வகிக்கின்றன. ஹிஜாப் அணிவதற்கு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளது.

சில பெண்கள் ஹிஜாப் அணியவில்லை என்றால், தாங்கள் அடித்து துன்புறுத்தப்படுவார்கள் என்று பயப்படுகிறார்கள்.

மத அடிப்படைவாதிகள் தான் பெண்களை புர்கா மற்றும் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்துகிறார்கள். ஹிஜாப் என்பது ஒரு மத அமைப்பில் உருவானதில்லை. ஹிஜாப் ஒரு அரசியல். தைரியமான இந்த ஈரானிய பெண்களுக்குத் தலைவணங்குகிறேன் ‘’ என ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தஸ்லிமா நஸ்ரீன் கூறினார்.