உலகம்

‘அதிவேகத்தில் பரவும் உருமாறிய ஒமைக்ரான்’ - 57 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக WHO தகவல்

‘அதிவேகத்தில் பரவும் உருமாறிய ஒமைக்ரான்’ - 57 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக WHO தகவல்

சங்கீதா

அதிவேகமாக பரவும் ஒமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த பிஏ.2 வைரஸ், இதுவரை 57 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பின்னர், ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என உருமாறியது. இதற்கிடையில் கடந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி, தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை ஒமைக்ரான் திரிபு கண்டறியப்பட்டது. டெல்டா வகை கொரோனாவைவிட  ஒமைக்ரான் அதிவேகத்தில் பரவினாலும், குறைந்த அளவே பாதிப்பு ஏற்படுத்தியது. இந்த ஒமைக்ரானுக்கு BA.1 என்று உலக சுகாதர மையம் அடையாளப்படுத்தியது. இப்போது உலகளவில் உள்ள 96% தொற்றுக்கு BA.1, BA.1.1 திரிபுகளே காரணமாக உள்ளன. இதுதவிர BA.2, BA.3 துணை ஒமைக்ரான் வகைகளும் கண்டறியப்பட்டன.

ஆனால் தற்போ BA.2 திரிபு அதிவேகமாக பரவிவருவதாக ஜி.ஐ.எஸ்.ஏ.ஐ.டி. (GISAID) அமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் கெரோனா வைரஸ் மரபணு வரிசைத்தொடர்களை இந்த அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. BA.2, என்ற உரு, இயல் மாற்றமடைந்து (mutation) புதிய துணை ஒமைக்ரான் வகை அதிவேகமாகப் பரவக் கூடியது என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து உலக சுகாதார அமைப்பில் கொரோனா நிபுணர் குழு உறுப்பினரான மரியா வான் கெர்கோவ், "இதுவரை BA.2 என்ற ஒமைக்ரானின் புதிய துணை வகை திரிபு குறித்து மிகக் குறைவான தகவல்களே கிடைத்துள்ளன. தற்போது வரை இது 57 நாடுகளில் உள்ளது. இது ஒமைக்ரானைவிட அதிவேகமாகப் பரவுகிறது. ஆனால் ஒமைக்ரானைப் போல் குறைந்த நோய்த் தன்மையே கொண்டுள்ளதா என்பதை இன்னும் உறுதிபடுத்த இயலவில்லை. பிஏ.2-பல்வேறு முறை உருமாற்றங்கள் அடைகிறது. அதன் ஸ்பைக் புரோடீனிலும் மாற்றம் ஏற்பட்டு மனித செல்களில் நுழைந்துவிடுகிறது. 4 புதிய வேரியண்ட்களில் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க ஆய்வு செய்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.