ஹிஸ்புல்லா அமைப்பு உடனான போர் முகநூல்
உலகம்

ஹிஸ்புல்லாவின் தலைவரை தொடர்ந்து வீழ்த்தப்பட்ட முக்கிய தளபதி; போரை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம்?

PT WEB

ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவிற்கு எதிரான போரை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் நஸரல்லாவை தொடர்ந்து நபில் கவுக் என்ற முக்கிய தளபதியையும் வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

தென் திசையில் ஹமாசுடன் போரிட்டு வரும் இஸ்ரேலிய படைகள் வட திசையில் ஹிஸ்புல்லாக்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவை 30 ஆண்டுகளுக்கு மேலாக வழிநடத்திய ஹசன் நஸரல்லாவை வீழ்த்தியது இப்போரில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மற்றொரு மூத்த தலைவரான நபில் கவுக்-ஐயும் கொன்றுள்ளதாக கூறியுள்ளது இஸ்ரேல். இதற்கிடையே இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் லெபனானில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லா தலைவரை கொன்ற இஸ்ரேலை எதிர்த்து ஈரானில் பரவலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவையும் இஸ்ரேலையும் அழித்தே தீர வேண்டும் என ஈரானிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் முழங்கினர்.

Nabil Kaouk

இதற்கிடையே பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தங்கள் லட்சியங்களை எட்ட ஹிஸ்புல்லா தலைவரை அழிப்பது அவசியமாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார். நஸரல்லா வீழ்த்தப்பட்டுள்ள நிலையில் ஹஷீம் சஃபியிதீன் என்பவரை தங்கள் தலைவராக ஹிஸ்புல்லாக்கள் தேர்ந்தெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட நஸரல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரரான ஹஷீம் ஹிஸ்புல்லாக்களின் அரசியல் பிரிவை நிர்வகித்து வருபவர் ஆவார்