ஹசன் நஸ்ரல்லா, ரஷ்யா, சீனா கொடிகள் எக்ஸ் தளம்
உலகம்

இஸ்ரேலின் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொலை| ஆதரிக்கும் அமெரிக்கா.. கண்டிக்கும் ரஷ்யா,சீனா நாடுகள்!

சமீபத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்தது. இதற்கு ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

Prakash J

இஸ்ரேல் - காஸா இடையேயான போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்கள், இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரேல்- லெபனான் இடையே சமீபகாலமாக நடைபெற்று வரும் போரில், இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 3,000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தைக் குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்தது. இதுகுறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா இனி உலகத்தை பயமுறுத்த முடியாது. இஸ்ரேல் நாட்டின் குடிமக்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: முக்கிய செய்தி|அக். மாதத்தில் 15நாட்கள் வங்கிகள் விடுமுறை; எந்த மாநிலம்,எந்தெந்த தேதிகள்? முழுவிபரம்

ஆனால், ஹிஸ்புல்லா அமைப்பிடம் இருந்து இதுகுறித்து எந்தத் தகவலும் இல்லை. இது, உலக நாடுகளை அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அதேநேரத்தில், ஹிஸ்புல்லா தலைவர் நஸரல்லா கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை நோக்கி, ஹிஸ்புல்லா கொடிகளை கையில் ஏந்தியபடி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் இன்று பேரணியாக சென்றனர். அப்போது காவல் துறையினருக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையே வெடித்த மோதல வன்முறையாக மாறியது.

இதற்கிடையே, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸரல்லா படுகொலைக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. ”நஸரல்லாவின் மரணம் மத்திய கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய மோதலை தூண்டலாம்” என ரஷ்யா கவலை தெரிவித்துள்ளது. மேலும், ”காஸாவைப் போன்று லெபனானும் மாற்றப்பட்டு வருகிறது” என ரஷ்ய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: திருப்பதி ஏழுமலையான் கோயில்| நாளை விஐபி தரிசனம் ரத்து!

அதுபோல் சீனாவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீனா, “ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ள சூழலில் பிரதேசத்தில் நிலவும் நிலைமை குறிட்த்து அதிகமாக கவலைப்படுகின்றது. லெபனானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் செயல்களையும், அப்பாவி மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எத்தகைய நடவடிக்கைகளையும் தங்கள் நாடு எதிர்க்கிறது” எனத் தெரிவித்துள்ளது.

ஜோ பைடன்

அதேநேரத்தில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் குண்டு வீசி கொன்றது பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நடவடிக்கை. ஹிஸ்புல்லா, ஹமாஸ் மற்றும் ஈரானிய ஆதரவு பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக இஸ்ரேலின் நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்கிறது” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”இது எனக்கு பெரிய அவமானம்..” - IIFA விருது விழாவில் நடந்த மோசமான அனுபவம்.. கன்னட இயக்குநர் காட்டம்!