பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளம்
உலகம்

பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு குறியா? பிரதமர் இல்லத்தின் மீது பறந்த ட்ரோன்.. ஹிஸ்புல்லா தாக்குதல்!

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி, டெல் அவிவ் நகரின் வடக்கே உள்ள சிசேரியா நகரில் இன்று காலை ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Prakash J

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில்தான் இஸ்ரேல் அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் - காஸா இடையே ஓராண்டைக் கடந்து போர் நடைபெற்றுவரும் சூழலில் இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.

இந்த போரால் காஸாவில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. எனினும், ஹமாஸை அழிக்கும்வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்த நிலையில், தொடர்ந்து அங்கு போர் நடைபெற்று வருகிறது.

அதன் விளைவாக ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டனர். சமீபத்தில்கூட, ஹமாஸ் அமைப்பின் மூளையாகச் செயல்பட்ட யாஹியா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதை அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் உறுதிப்படுத்தியிருந்தார்.

இதையும் படிக்க; தொடரும் மோதல்|சாலைகள் வெடிவைத்து தகர்ப்பு.. தென்கொரியாவை முதல்முறையாக எதிரிநாடாக அறிவித்த வடகொரியா!

இந்த நிலையில், இஸ்ரேல் படைகளுடன் லெபனான் எல்லையில் சண்டையிட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பினர், அந்நாட்டின் உட்புற பகுதிகள் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்திவருகிறது. அந்த வகையில், இன்று காலை (அக்.19) லெபனானில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் குடியிருப்பு அமைந்துள்ள சிசேரியா நகரின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.

இதனால் சிசேரியா பகுதியில் நெதன்யாகு இல்லம் அமைத்துள்ள இடத்தின் அருகே உள்ள கட்டடத்தின் மீது லெபனான் ட்ரோன் தாக்கியதாகவும் இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது.தாக்குதல் நடத்த சமயத்தில் நெதன்யாகுவும் அவரது மனைவியும் வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு வடக்கே உலா கிலோட் பகுதியில் இரண்டு ட்ரோன்கள் பறந்ததாகவும் அதை அழித்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: உக்ரைன் போர்|’ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய 12,000 வடகொரிய ராணுவ வீரர்கள்’- தென்கொரியா குற்றச்சாட்டு