உலகம்

உயிரோடு புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்!

webteam

தாய்லாந்தில் உயிரோடு புதைக்கப்பட்ட குழந்தையை, நாய் ஒன்று காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில், சும்பாங் என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது இளம் பெண், ஆண் குழந்தை ஒன்றை பெற்றார். இந்தக் குழந்தையை, சில நாட்களுக்கு முன் அங்குள்ள வயல்வெளியில் குழிதோண்டி உயிருடன் புதைத்து விட்டு ஓடிவிட்டார். அப்போது அங்கு நின்ற நாய் ஒன்று இதை பார்த்துவிட்டது. பின் வேகமாக அந்த இடத்துக்குச் சென்ற நாய், மண்ணை காலால் தோண்டியது. பின்னர் அங்கிருந்து வேகமாக குரைத்தது.
நாய் ஏன் அங்கு நின்று குரைக்கிறது என்ற சந்தேகத்தில், நாய்க்கு சொந்தக்காரர் உஷா நிஷைக்கா அங்கு சென்று பார்த்தார். அப்போது குழந்தை ஒன்றின் கால் தெரிந்தது. இதையடுத்து போலீசுக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் அவர் தகவல் தெரிவித்தார். பின்னர் மண்ணைத் தோண்டி குழந் தையை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, தனக்கு 15 வயதுதான் என்பதால் வீட்டுக்குத் தெரியாமல் இருக்க, குழந்தையை புதைத்தேன் என்று தெரிவித்தார். தற்போது குழந்தை நலமாக இருப்பதாக போலீசார் தெரிவித் துள்ளனர். 

குழந்தையை உயிருடன் மீட்க உதவிய நாய், அந்த பகுதியில் திடீர் ஹீரோவாகி இருக்கிறது. நாயின் உரிமையாளர் உஷா நிஷைக்கா கூறும் போது, ‘’இந்த நாயின் பெயர், பிங்போங் (Ping Pong ). இதற்கு ஒரு கால் செயல்படாது. ஒரு விபத்தில் அது காயமடைந்து விட்டதால் மூன்று கால்களுடன்தான் நடக்கும். நான் கால்நடைகளை மேய்த்து வருகிறேன். எனக்கு பல விதங்களில் இந்த நாய் உதவி வருகிறது. இப்போது இது ஹீரோவாகி விட்டது’’ என்றார்.