Sunita William, Willmore pt desk
உலகம்

போயிங் விண்கலத்தில் சரி செய்யப்பட்ட ஹூலியம் கசிவு: சுனிதா, வில்மோர் பூமிக்கு திரும்புவது எப்போது?

போயிங் விண்கலத்தில் ஏற்பட்டுள்ள ஹூலியம் கசிவு சீர் செய்யப்பட்டு முதல் சோதனை நேற்று வெற்றி கரமாக முடிவடைந்தது. இதன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகஸ்ட் மாதத்தில் பூமிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

webteam

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5ஆம் தேதி விண்வெளிக்கு சென்றனர். சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு இருவரும் கடந்த மாதம் 13ஆம் தேதி பூமிக்கு திரும்பும் வகையில் பயணத் திட்டம் வரையறுக்கப்பட்டிருந்தது.

Nasa

ஆனால் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்பும் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் பயணித்த ஸ்டார்லைன் போயிங் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

அதன் தொடர்ச்சியாக, நேற்று பிற்பகல் நேரத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தோடு இயக்கப்பட்டு இருக்கும் போயிங் விண்கலத்தின் ஃப்ளைட் கன்ட்ரோலர் த்ரஸ்டர்கள் அடுத்தடுத்து சோதனை செய்யப்பட்டது.

விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் சோதனையின் போது ஸ்டார்லைனர் கலிப்சோவிற்குள் அமர்ந்து நிகழ்நேர கருத்துக்களை வழங்கினர். வீடு திரும்புவதற்கான தயாரிப்பில், அடுத்த வாரம் வில்மோர் மற்றும் வில்லியம்ஸ் இரண்டு அன்டாக் டு லேண்டிங் சிமுலேஷன்களில் பங்கேற்பார்கள் என போயிங் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விண்கலத்தில் ஹூலியம் வாயு கசிவு சீர் செய்யப்பட்டு முதல் சோதனை வெற்றி கரமாக நடத்தப்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் ஆகஸ்ட் மாதம் எப்போது வேண்டுமானாலும் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.