காஸா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும்வரை தாக்குதல் தொடரும் எனக் கூறி, தொடர்ந்து போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது இஸ்ரேல்.
இந்த நிலையில், இஸ்ரேல் - காஸா இடையேயான போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
குறிப்பாக, ஈரான் ஆதரவுகொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரேல்- லெபனான் இடையே சமீபகாலமாக நடைபெற்று வரும் போரில், இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 3,000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தைக் குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால், ஹிஸ்புல்லா அமைப்பிடம் இருந்து இதுகுறித்து எந்தத் தகவலும் இல்லை.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’ ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா இனி உலகத்தை பயமுறுத்த முடியாது. இஸ்ரேல் நாட்டின் குடிமக்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, ஹசன் நஸ்ரல்லா மகள் ஜெய்னாப் நசரல்லா உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
"நஸ்ரல்லா கொல்லப்பட்டிருந்தால்கூட, ஹிஸ்புல்லா ஒருபோதும் வீழ்ச்சியடையாது" என்று சத்தம் ஹவுஸ் பாலிசி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வாளர் லினா காதிப் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி, நாட்டிற்குள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், அங்கு அவருக்கு உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் 32 வருடங்களாக ஹிஸ்புல்லாவிற்கு தலைமை தாங்கிய நஸ்ரல்லாவின் மரணத்திற்குப் பிறகு, அந்த அமைப்பை வழிநடத்தக் கூடியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில், தற்போது, ஹஷேம் சஃபிதீன் நஸ்ரல்லாவின் வாரிசாகக் கருதப்படுகிறார். என்றாலும், எந்தவொரு புதிய தலைவரும் ஹிஸ்புல்லாவின் உள்பிரிவுகள் மற்றும் அதன் ஈரானிய ஆதரவாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
ஹிஸ்புல்லாவின் அரசியல் விவகாரங்களை மேற்பார்வையிடும் மற்றும் குழுவின் ஜிஹாத் கவுன்சிலின் உறுப்பினரான சஃபிதீன், நஸ்ரல்லாவின் உறவினர் ஆவார். அமெரிக்க வெளியுறவுத்துறை அவரை, கடந்த 2017-ஆம் ஆண்டு பயங்கரவாதி என அறிவித்திருந்தது.
நஸ்ரல்லா, அமைப்புக்குள் பல்வேறு பதவிகள் மூலம் சஃபிதீனை தலைமைப் பதவிக்கு வளர்த்து வந்தார். அந்த வகையில், அவரது குடும்ப உறவுகள், நஸ்ரல்லாவுடன் உடல் ஒற்றுமை மற்றும் மத அந்தஸ்து அனைத்தும் அவரது சாத்தியமான தலைமைக்கு பங்களிக்கும் எனக் கூறப்படுகிறது.
லெபானானில் உள்ள கிழக்கு பெய்ரூட்டில் 1960-ல் பிறந்த ஹசன் நஸ்ரல்லாவின், ஆரம்பகால வாழ்க்கை லெபனான் உள்நாட்டுப் போரால் வடிவமைக்கப்பட்டது. இதற்காக, அவர் தன் மூதாதையர் கிராமத்திற்குத் திரும்ப வேண்டியிருந்தது.
15 வயதில், ஷியா அரசியல் மற்றும் துணை ராணுவக் குழுவான அமல் இயக்கத்தில் சேர்ந்தார். கல்விக்காக ஈராக் சென்ற அவர், ஷியா தீவிரவாதிகளுக்கு எதிரான அரசாங்க அழுத்தங்கள் காரணமாக 1978-ல் அவர் மீண்டும் லெபனான் திரும்பினார்.
1982-ல், இஸ்ரேலிய படையெடுப்பைத் தொடர்ந்து, ஈரானின் புரட்சிகர காவலர்களால் உருவாக்கப்பட்ட ஹில்புல்லா அமைப்பில் சேருவதற்காக அமல் இயக்க்தில் இருந்து பிரிந்தார். 1992-ல் அவரது முன்னோடி அப்பாஸ் அல்-முசாவி படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவரது தலைமையில் ஹிஸ்புல்லா அமைப்பு இயங்க ஆரம்பித்தது.
நஸ்ரல்லா, ஈரானுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட ஒரு நபர். அதுமட்டுமல்லாது ஹிஸ்புல்லாவை ஓர் அரசியல் மற்றும் ராணுவ சக்தியாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகித்தவர், குழுவின் ஆதரவாளர்களால் மதிக்கப்பட்டவர். நஸ்ரல்லா தலைமையின்கீழ், பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் மற்றும் ஈராக், ஏமனில் உள்ள போராளிகளுக்குப் பயிற்சி அளித்தது.
லெபனானை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேலிய துருப்புகளை எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட ஹெஸ்பொலா இயக்கத்தை, லெபனான் ராணுவத்தை விட வலிமையான ஒரு படையாக மாற்றியவர் நஸ்ரல்லா. தனது மூத்த மகன் ஹாடி இஸ்ரேலிய துருப்புகளுடனான துப்பாக்கிச் சண்டையில் (2000ஆம் ஆண்டில்) கொல்லப்பட்ட போதும்கூட தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகளுடனான போரை நஸ்ரல்லா தொடர்ந்து முன்னின்று நடத்தினார். அங்கிருந்து இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்கியதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு எதிரான முதல் அரபு வெற்றியை ஹிஸ்புல்லா அடைந்துவிட்டதாக நஸ்ரல்லா அறிவித்தார்.
”ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா எந்த ஒரு பொது பதவியையும் வகிக்கவில்லை. ஆனால் அவர் லெபனானின் உண்மையான ஆட்சியாளராக இருந்தார். அவர் தொலைக்காட்சி மூலம் உரையாற்றுவார். நாட்டில் அதிபரும், பிரதமரும் இருந்தாலும் நஸ்ரல்லா சொல்வதைக் கேட்டு நாடு இயங்குவதற்கு அவர்களின் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன" என மூத்த பத்திரிகையாளர் ஹுசைன் அப்துல்ஹுசைன் தெரிவித்துள்ளார்.