உலகம்

புரட்டிப் போட்ட ஹார்வே புயல்: வெள்ளத்தில் மிதக்கும் ஹூஸ்டன்

புரட்டிப் போட்ட ஹார்வே புயல்: வெள்ளத்தில் மிதக்கும் ஹூஸ்டன்

webteam

அமெரிக்காவின் ‌ஹூஸ்டன் ‌நகரை புரட்‌டிப் போட்ட ஹார்வே புயல் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்‌கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ள‌‌‌‌‌‌‌‌ன.

ஹார்வே புயல் பாதிப்பு குறித்து கடற்படை துணைத் தலைவர் கார்ல் ஸ்கல்ட்ஸ் கூறுகையில், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு இது மிகவும் ஆபத்தான புயலாக இருக்கிறது. அடுத்து வரும் நாட்களில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புயலை குறைத்து மதிப்பிட்டு சவாலான பணிகளில் இறங்க‌வேண்டாம். பல நேரங்களில் புயலைப் பற்றி மக்கள் தவறாக எடை போட்டு விடுகின்றனர். அடுத்து வரும் நாட்களிலும் வெள்ள நீரின் அளவு உயரும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரம் ‌தற்போது வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 2005 ஆம் ஆண்டு கோர தாண்டவம் ஆடிய கத்ரீனா புயலுக்குப் பின் தற்போது ஹார்வே புயல் தாக்கியிரு‌ப்பது அமெரிக்க மக்களை உலுக்கி எடுத்து வருகிறது. மணிக்கு 210 ‌கி.மீ வேகத்தில் கரையை கடந்த ஹார்வே புயலால் டெக்சாஸ் மாகாணம் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது.

குறிப்பாக ஹூஸ்டன் நகரை ஹார்வே புயல் கடுமையாக புரட்டிப் போட்டுள்ளது. கனமழைக்கு இடையே கோரத்தாண்டவம் ஆடிய ஹார்வே புய‌லால் மரங்கள் வேரோடு சா‌ய்ந்துள்ளன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் கடுமை‌யாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

படகுகள் மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு சாலைகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளின் கூரைகளுக்கு மேல் தஞ்சம் அடைந்துள்ளன‌ர். படகுக‌ள், ஹெலிகாப்டர்களி‌ல் விரைந்துள்ள மீட்புப் படையினர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தி வருகின்றனர். ஏராளமான வாகனங்கள் வெள்ள நீரில் மூழ்கியிருப்பதால் ஒரு சிலர் ‌உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது‌. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கா‌க ஹூஸ்டனில் உள்ள ஜா‌ர்ஜ் பிரவுன் கருத்தரங்கு மையம் தற்காலிக நிவாரண முகாமாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் புதன்கிழமை‌ வரை கனமழை நீடிக்கும் என எச்ச‌‌ரிக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.