உலகம்

பாலஸ்தீன ஹமாஸ், ஃபதா உடன்பாட்டைக் குலைக்க அமெரிக்கா சதி: ஹமாஸ்

பாலஸ்தீன ஹமாஸ், ஃபதா உடன்பாட்டைக் குலைக்க அமெரிக்கா சதி: ஹமாஸ்

webteam

பாலஸ்தீனத்தில் ஹமாஸ், ஃபதா இடையேயான உடன்பாட்டைக் குலைக்க அமெரிக்கா சதி செய்வதாக ஹமாஸ் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

பாலஸ்தீனத்தில் செய்து கொள்ளப்பட்டிருக்கும் சமரச உடன்பாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் ஃபதா இயக்கமும் ஹமாஸ் இயக்கமும் உறுதியாக இருக்கின்றன. இவ்விரு அமைப்புகளும் கெய்ரோவில் அண்மையில் நடந்த அமைதிப் பேச்சுகளுக்குப் பிறகு சமரச உடன்பாட்டில் கையெழுத்திட்டன. ஒருங்கிணைந்த அரசில் ஹமாஸ் இயக்கத்தினரைச் சேர்த்துக் கொள்வதற்கும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. 

இந்த நிலையில், அரசில் இடம்பெறவேண்டுமானால், ஹமாஸ் இயக்கம் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி ஜேசன் கிரீன்பிளாட் கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த ஹமாஸ் இயக்கம், அமெரிக்காவின் மிரட்டும் உத்தி, இஸ்ரேலுக்குச் சாதகமானது என்று குற்றம்சாட்டியிருக்கிறது. சமரச உடன்பாட்டை குலைப்பதற்காகவே இந்த விவகாரத்தில் அமெரிக்கா நுழைவதாகவும் ஹமாஸ் இயக்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.