விடுவிக்கப்பட்ட மக்கள் pt web
உலகம்

ஹமாஸ் அமைப்பினரால் கொல்லப்பட்டதாக பரவிய செய்தி; உயிருடன் வந்து தந்தையை கட்டியணைத்த சிறுமி!

ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்ட ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்த 9 வயது சிறுமி தந்தையுடன் இணைந்த உணர்ச்சி மிகு தருணங்கள் அடங்கிய காணொளி வெகு வேகமாகப் பரவி வருகிறது.

PT WEB

ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்ட ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்த 9 வயது சிறுமி தந்தையுடன் இணைந்த உணர்ச்சி மிகு தருணங்கள் அடங்கிய காணொளி வெகு வேகமாகப் பரவி வருகிறது. விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள் குடும்பத்தினரை பார்த்ததும் கண்ணீருடன் கட்டியணைத்து வரவேற்றது காண்போரை நெகிழ்ச்சியடைச் செய்தது.

இருதரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 4 வெளிநாட்டினர் உட்பட 17 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். முன்னதாக, கடந்த அக்டோபர் 7ஆம் தேதியன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் புகுந்து தாக்குதல் நடத்தியபோது 9 வயது சிறுமி எமிலி ஹேண்ட் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது. எமிலியின் உறவினர் ஒருவரே இந்த தகவலை கூறியதால் ஐயர்லாந்தில் இருந்த அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.

இந்த சூழலில் எமிலி கொல்லப்படவில்லை, ஹமாஸ் அமைப்பினர் பிடியில் உள்ளதாக அக்டோபர் 31ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது. இதனால் நம்பிக்கையை கைவிடாத எமிலியின் தந்தை தாமஸ் ஹேண்ட் இஸ்ரேலில் தங்கியிருந்தார். அதற்கு பலனாக விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளில் ஒருவராக எமிலியும் வெளிவந்து தனது தந்தையை ஓடிச்சென்று கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த வீடியோவை குறிப்பிட்டு, இது ஒப்பில்லா உணர்வினைத் தரும் தருணம் என்று ஐயர்லாந்து அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் அமைப்பினரால் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள், இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனையில் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்று சேர்ந்தனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினரை பார்த்ததும் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது, காண்போரை நெகிழ்ச்சியடைய வைக்கும் வகையில் அமைந்திருந்தது.