குா்பத்வந்த் சிங் பன்னுன், விகாஷ் யாதவ் எக்ஸ் தளம்
உலகம்

பன்னுன் கொலை முயற்சி | முன்னாள் ’ரா’ அதிகாரி விகேஷ் யாதவ் மீது US குற்றச்சாட்டு.. மறுக்கும் இந்தியா!

”சர்வதேச அரசியலில் முன்னாள் ரா அதிகாரி விகாஷ் யாதவ் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்” என்று அவரது வழக்கறிஞர்கள் ஆர்.கே.ஹண்டூ மற்றும் ஆதித்யா சவுத்ரி தெரிவித்துள்ளனர்.

Prakash J

குா்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல முயற்சி!

அமெரிக்கா மற்றும் கனடாவின் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுள்ள குா்பத்வந்த் சிங் பன்னுன், தேசத் துரோகம் மற்றும் பிரிவினைவாதத்தின் அடிப்படையில் ஜூலை 2020 முதல் உள்துறை அமைச்சகத்தால் பயங்கரவாதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னூனைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டதாகவும், இதில் ‘ரா’ உளவு அமைப்பைச் சோ்ந்த முன்னாள் அதிகாரி விகாஸ் யாதவுக்கு தொடா்புள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டினா்.

இந்த நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் பெயரைச் சொல்லி மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற சம்பவத்தில் டெல்லி காவல்துறையினர் கடந்த ஆண்டு இறுதியில் விகாஷ் யாதவ்வை கைதுசெய்து திகார் சிறையில் அடைத்திருந்தநிலையில், சில மாதங்களுக்குப் பிறகு அவர் பிணையில் விடுதலையான தகவலும் வெளியாகியிருக்கிறது. தேசிய புலனாய்வு அமைப்பில் பணியாற்றுவதாகக் கூறி, ராஜ்குமார் வாலியா என்பவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக, விகாஸ் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க விசாரணை அமைப்பான எஃப்பிஐ, இந்திய ரா அதிகாரி மீது குற்றஞ்சாட்டி, தேடப்பட்டு வரும் நபராக அறிவித்திருந்த நிலையில், டெல்லி காவல்துறையினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், சீக்கிய பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னூனை கொல்ல முயற்சித்த சம்பவத்துக்கு முறையாகப் பொறுப்பு ஏற்கப்படாதவரை, தமக்கு முழு திருப்தி ஏற்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த மத்திய அரசு, இந்த விவகாரம் தொடா்பாக விசாரிக்க விசாரணை குழுவை அமைத்துள்ளது. மேலும், அமெரிக்காவின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் விகாஷ் யாதவ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை.

இதையும் படிக்க: இன்று ஒரேநாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் | மொத்தமாக 4 நிறுவனங்கள் பாதிப்பு!

”பன்னுன் கொலை முயற்சி சம்பவம் இந்தியா பொறுப்பேற்க வேண்டும்!”

இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித்தொடா்பாளா் வேதாந்த் படேல், “கடந்த வாரம் பன்னுன் விவகாரம் தொடா்பாக இந்திய விசாரணை குழு அமெரிக்கா வந்தது. அப்போது அந்த விவகாரம் தொடா்பான மேல் விசாரணைக்கு இருநாட்டு அதிகாரிகளும் பரஸ்பரம் தகவல்களை பரிமாறிக்கொண்டனா். இந்தப் பேச்சுவாா்த்தையின் அடிப்படையில், இந்தியாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா எதிா்பாா்க்கிறது. இந்த விவகாரத்தில் இந்திய விசாரணையில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில், பன்னுன் கொலை முயற்சி சம்பவத்துக்கு முறையாகப் பொறுப்பேற்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. அதுவரை அமெரிக்காவுக்கு முழு திருப்தி ஏற்படாது” எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரசியலில் முன்னாள் அரசு ஊழியர் விகாஷ் யாதவ் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்”.
விகாஷ் யாதவ் தரப்பு வழக்கறிஞர் ஆர்.கே.ஹண்டூ

”விகேஷ் யாதவ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை”

இந்த நிலையில், ”சர்வதேச அரசியலில் முன்னாள் ரா அதிகாரி விகாஷ் யாதவ் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்” என்று அவரது வழக்கறிஞர்கள் ஆர்.கே.ஹண்டூ மற்றும் ஆதித்யா சவுத்ரி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கறிஞர் ஆர்.கே.ஹண்டூ, ”குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல சதி செய்ததாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. ஒருபோதும் விகாஷ் யாதவ் அமெரிக்கா செல்லவில்லை. அவர் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை. அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இது, இந்தியாவிற்கு எதிரான ஒரு பெரிய சர்வதேச சதியின் ஒரு பகுதியாகும். அவர் நிரபராதி” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அமெரிக்க டாலருக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. விரைவில் புதிய நாணய மதிப்பு.. பிரிக்ஸ் மாநாட்டில் ஆலோசனை!

விகாஷ் யாதவ் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்ன?

விகாஷ் யாதவ் முதன்மைக் குற்றவாளி அல்ல. அதாவது, இணைச் சதிகாரர் CC-1(co-conspirator) என்று கருதப்படுகிறார். இந்திய அரசு அதிகாரியான இவர், மற்றொரு குற்றவாளியுடன் இணைந்து அமெரிக்க குடிமகனை கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார் என்று எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளி நிகில் குப்தா கடந்த ஆண்டு செக் குடியரசு நாட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பன்னுனின் படுகொலை முயற்சிக்கு விகாஷ் யாதவ் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள தனிநபர்களுடன் ஒத்துழைத்ததாகவும், விகாஷ் யாதவும் குப்தாவும் 100,000 அமெரிக்க டாலர்களுக்கு ஒரு தனிநபரை படுகொலை செய்ய ஒப்பந்தம் செய்ததாகவும் குற்றப்பத்திரிகை கூறுகிறது.

யார் இந்த விகாஷ் யாதவ்?

இந்தியாவின் துணை ராணுவமான மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) விகாஷ் யாதவ் பணியாற்றியதாகவும், போர்க் கருவிகள் மற்றும் ஆயுதங்களில் பயிற்சி பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. அவரது பெயர் விகாஸ் மற்றும் அமானத் என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அவர் இந்திய அரசின் அமைச்சரவை செயலகத்தில் பணியில் இருந்தவர். அதன்கீழ்தான் இந்தியாவின் உயர் புலனாய்வு அமைப்பான `ரா’ (RAW) செயல்படுகிறது. `ரா’ உளவு அமைப்பு பிரதமர் அலுவலகத்தினுடைய (PMO) அதிகாரத்தின்கீழ் செயல்படுகிறது. பாதுகாப்பு மேலாண்மை மற்றும் உளவுத்துறை ஆகிய பிரிவுகளில் அவர் மூத்த கள அதிகாரியாக இருந்துள்ளார்.

இதையும் படிக்க: பிரிஜ் பூஜன் சிங்கிற்கு எதிரான போராட்டம்|வெளியான அதிர்ச்சி தகவல்.. உண்மையை உடைத்த சாக்‌ஷி மாலிக்!