200 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கில செய்தி நிறுவனமான தி கார்டியன் எக்ஸ் தளத்தில் பதிவுகளை வெளியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளது. அதாவது எக்ஸ் தளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அந்நிறுவனம், எக்ஸ் தளத்தில் நச்சுத் தன்மை அதிகமாகிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது. “அதிகாரப்பூர்வமான கார்டியன் கணக்குகளில் இருந்து, சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் பதிவுகளை வெளியிட மாட்டோம் என வாசகர்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம்.
தீவிர வலதுசாரி கோட்பாடுகள், இனவெறி உள்ளிட்ட தொந்தரவு தரக்கூடிய உள்ளடக்கங்களை விளம்பரப்படுத்துவதும் தளத்தில் காணப்படுவது தொடர்பாகவும் சிறிது காலமாகவே நாங்கள் விவாதித்து வந்தோம். X என்பது ஒரு நச்சு ஊடக தளமாகும். அதன் உரிமையாளரான எலான் மஸ்க் அதன் செல்வாக்கைப் பயன்படுத்தி, அதில் அரசியல் உரையாடலை வடிவமைக்க முடிந்தது” என தெரிவித்துள்ளது. எக்ஸ் தளத்தில் இருக்கும் இருக்கும் நன்மைகளை விட எதிர்மறைகள் அதிகமாகிவிட்டதாக தெரிவித்துள்ளது.
தி கார்டியன் கணக்கு மட்டும் எக்ஸ் தளத்தில் 10.8 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது. தி கார்டியன், கார்டியன் சைன்ஸ், கார்டியன் ஸ்போர்ட்ஸ் என 80க்கும் மேற்பட்ட கணக்குகளை எக்ஸ் தளத்தில் வைத்துள்ளது. 2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் எக்ஸ் தளத்தை வாங்கிய பின், முதல் முறையாக மிகப்பெரிய ஊடகமான தி கார்டியன் இனி இடுகைகளை இடுவதில்லை என தெரிவித்துள்ளது.
சிஎன்என் தொலைக்காட்சியின் முன்னாள் தொகுப்பாளரான டான் லெமனும் எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”இந்த தளம் நேர்மையான விவாதம் மற்றும் உரையாடலுக்கும், வெளிப்படைத் தன்மைக்கும், பேச்சு சுதந்திரத்திற்குமான இடம் என நம்பினேன். ஆனால், அந்த நோக்கத்திற்கு இப்போது உதவவில்லை என்பதுபோல உணர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
டான் லெமன் ப்ளூஸ்கை தளத்தில் தன்னை பின் தொடருமாறும் தெரிவித்துள்ளார். bluesky என்பது ட்விட்டரின் இணை நிறுவனரும், சிஇஓ ஆகவும் இருந்த ஜாக் டோர்ஸியின் நிறுவனமாகும். இது கடந்த சில நாட்களாக அமெரிக்க மற்றும் இங்கிலாந்தில் மக்களால் அதிகம் தரவிறக்கம் செய்யப்படும் செயலியில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் அதன் பயனர்களின் எண்ணிக்கை 4 மில்லியன்களாக அதிகரித்துள்ளது.
இதனிடையே, தி கார்டியன் விலகியது குறித்து எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில், அவர்கள் அழிவில் உள்ள செய்தி நிறுவனம் என மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், தனது இரண்டாவது அரசாங்கத்தில் தொழிலதிபர்களான எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அரசாங்க செயல்திறன் (Department of Government Efficiency) துறைக்கு தலைமை தாங்குவார்கள் என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.