உலகம்

கிரீஸ் நாட்டின் முதல் பெண் அதிபரானார் கேடரினா

webteam

கிரீஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக அந்நாட்டின் உயர்நீதிபதி கேடரினா சாகெல்லரோபவுலூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போது கிரீஸ் நாட்டின் அதிபராக புரோகோபிஸ் பாவ்லோபெளலோவ் உள்ளார். இவரின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. அதன்பின்னர் கேடரினா சாகெல்லரோபவுலூ பதவியேற்பார். நாடாளுமன்றத்தில் 300 பேரில் 261 எம்.பி.க்கள் அவருக்கு ஆதரவளித்தனர்.

தெசலோனிகியின் வடக்கு நகரத்தைச் சேர்ந்த கேடரினா சாகெல்லரோபவுலூ, 2018 ஆம் ஆண்டில் மாநில கவுன்சிலின் முதல் பெண் தலைவரானார். கணவரிடமிருந்து விவாகரத்தான இவர் மத்திய ஏதென்ஸில் வசித்து வந்தார். மேலும், சமூக வலைதளங்களிலும் பிரபலமாகியிருந்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஏராளமான பதிப்புகளை எழுதியுள்ளார். பல ஆண்டுகளாக கிரேக்கத்தில் அதிபரை தேர்வு செய்வதில் நாடாளுமன்றம் தோல்வியை தழுவியது.

சமீபத்திய சீர்திருத்தத்தைத் தொடர்ந்து, ஒரு அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை கொண்டுவரப்பட்டது. அதன்படி நாடாளுமன்ற எம்பிக்கள் கேடரினா சாகெல்லரோபவுலூ-வை கிரீஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுத்தனர். 64 வயதான கேடரினா சாகெல்லரோபவுலூ, கிரேக்கத்தின் உயர் நிர்வாக நீதிமன்றமான மாநில கவுன்சிலின் தலைவராக இருந்துள்ளார்.