தன் பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் சட்டத்தினை கிரேக்க பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் அனைவருக்கும் திருமண சமத்துவத்தை நிறுவும் ஆர்த்தடாக்ஸ் கிறித்தவ நாடுகளில் முதல் நாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகளுக்கான மைல்கல் வெற்றி என பாராட்டப்பட்ட இந்த முடிவு நாடாளுமன்றத்தில் 176 பேரால் ஆதரிக்கப்பட்டது. 76 பேர் இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர். 46 பேர் வாக்களிப்பில் ஆஜராகாத நிலையில் 2 பேர் வாக்களிப்பில் இருந்து விலகியுள்ளனர். இந்த சட்டமசோதா தன்பாலின தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுக்கும் உரிமைகளையும் வழங்குகிறது.
ஆண் தம்பதிகளுக்கு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற அனுமதி மறுக்கப்பட்டுள்ள வேலையில், பெண்களுக்கு அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உடல்நலக் காரணங்களுக்காக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்களுக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட போது அரசியல் ரீதியாக எதிர்ப்பு கணிசமாக இருந்தது. முன்னாள் பிரதமரான அண்டோனிஸ் சமரஸ் இந்த ஆபத்தான சட்டத்தினை நிறைவேற்றக்கூடாது என தொடர்பான விவாதங்களின் போது கூறியிருந்துள்ளார்.
“நாங்கள் இதற்காக பல ஆண்டுகள் காத்திருந்தோம். இது ஒரு வரலாற்றுத் தருணம், இது மிக மகிழ்ச்சியான நாள்” என தன்பாலின ஈர்ப்பு பெற்றோர் குழுவின் தலைவர் ஸ்டெல்லா பெலியா ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் கூறுகையில், மனித உரிமைகளுக்கான ஒரு மைல்கல் என்றும் திருமண சமத்துவத்தை சட்டமியற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரீஸ் 16 ஆவது நாடு என்றும் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளில் 15 நாடுகள் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளன. உலகம் முழுவதிலும் 35 நாடுகளில் இது அனுமதிக்கப்பட்டுள்ளது.