உலகம்

’இனி சென்சார் தான்’ சமூக வலைத்தளங்களுக்கு கடிவாளம் போடும் துருக்கி அரசு

EllusamyKarthik

மத்திய கிழக்கு நாடான துருக்கியில் சமூக வலைத்தளங்களை தணிக்கை செய்யும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது அந்நாட்டு அரசு. 

துருக்கி நாட்டின் பாராளுமன்றத்தில் இந்த சட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டு இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதற்கு துருக்கி நாட்டு அதிபர் தயிப் எர்டோகனின் ஆளும் ஏ.கே. கட்சி உறுப்பினர்களும், கூட்டணி கட்சியான தேசியவாதக் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவு  தெரிவித்திருந்தனர். 

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் துருக்கியில் செயல்பட்டு வரும் பெரும்பாலான ஊடகங்களை அந்நாட்டு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன.  

அதனால் துருக்கி மக்கள் தங்களது கருத்துகளை தனிப்பட்ட செய்திகளை பகிர அனுமதிக்கும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் தற்போது அதில் பகிரப்படும் கருத்துகளை சென்சார் செய்யும் நடைமுறையை சட்டத்தின் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது. 

அதிபர் எர்டோகன் மற்றும் அவரது அமைச்சர்களின் ராணுவ நிலைப்பாடு, கொரோனா சூழலை கையாண்ட விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்த மக்கள் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்காக பிரத்யேகமாக அதிகாரிகளையும் பணியமர்த்த துருக்கி அரசு தீர்மானித்துள்ளது.

‘சமூக வலைத்தளங்களுடன் வணிக மற்றும் சட்ட உறவுகளை ஏற்படுத்துவதற்காக தான் இதனை அமல்படுத்தியுள்ளோம்’ என்று துருக்கி அதிபரின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

இருந்தாலும் இது கருத்து சுதந்திரத்தை சமூக வலைத்தளங்களில் பகிர கடிவாளம் போடும் செயலாக உள்ளது என மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கருத்து சொல்லியுள்ளனர்.