உலகம்

அடுத்த 3 நாள்களில் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க தயாராகும் 26 விமானங்கள்

அடுத்த 3 நாள்களில் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க தயாராகும் 26 விமானங்கள்

நிவேதா ஜெகராஜா

உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து இந்தியர்கள் அனைவரும் வெளியேறிவிட்டதாகவும், இந்தியர்களை மீட்க அடுத்த 3 நாள்களில் 26 விமானங்கள் இயக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைனில் ரஷ்யா ராணுவத் தாக்குதலை தொடங்கியதில் இருந்தே வெளியுறவுத்துறை சார்பில் அங்கு சிக்கியிருந்த இந்தியர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை முடுக்கின. முதற்கட்டமாக ருமேனியா எல்லை வழியே மாணவர்களை விமானங்களில் இந்திய அரசு மீட்டு வந்தது. இருப்பினும் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட மையப்பகுதிகளில் சிக்கித் தவித்தவர்களை மீட்பதில் கடும் சிக்கல் நீடித்தது.

உணவு, உடை, இருப்பிடம் இன்றி பலரும் கட்டடங்களின் அடித்தளங்களிலும், மெட்ரோ சுரங்கப்பாதைகள், பங்கர்கள் உள்ளிட்டவற்றில் தங்கி வந்தனர். அப்படியானவர்கள் துப்பாக்கி, பீரங்கி குண்டுகளின் சத்தம், அபாய ஒலி ஆகியவற்றிற்கு நடுவே ஒவ்வொரு நொடியையும் ரணமாய்க் கடந்து வந்தனர்.

மறுபுறம் உக்ரைன் எல்லை வந்தடைந்த அம்மாணவர்களை, மற்ற நாடுகளின் எல்லைகளுக்கு அனுமதிக்காமலும் அந்நாட்டு படைகள் இருந்துவந்தனர். இதுதொடர்பாக அந்த மாணவர்களே தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. அவற்றை தொடர்ந்து, `ஆபரேஷன் கங்கா’ மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இத்தகைய சூழலில் உக்ரைன் தலைநகரான கீவில் இருந்து இந்தியர்கள் அனைவரையும் வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. ரயில், பேருந்து என ஏதாவது போக்குவரத்தை பயன்படுத்தி தாமதிக்காமல் வெளியேறி உக்ரைனின் மேற்கு பகுதிக்கு செல்லுமாறு இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில் ரஷ்யாவின் அதிகபட்ச தாக்குதலுக்கு உள்ளாகி வரும் கீவில் இருந்து இந்தியர்கள் அனைவரும் வெளியேறி விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து வெளியேறிய 1,700 இந்தியர்கள் தற்போது போலந்தில் தங்கி உள்ளதாகவும், மாணவர்களைப் பொறுத்தவரையில் சுமார் 12,000 பேர் உக்ரைனை விட்டு வெளியேறிவிட்டதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அடுத்த 3 நாள்களில் 26 விமானங்கள் இயக்கப்படும் எனவும் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. புகாரெஸ்ட், புடாபெஸ்ட் மற்றும் போலந்து, ஸ்லோவோக்கியா நாடுகளிலுள்ள விமான நிலையங்களைப் பயன்படுத்தியும் இந்தியர்கள் மீட்கப்படவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.