உலகம்

அன்றும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குழப்பம்... 2000-ஆம் ஆண்டில் என்ன நடந்தது தெரியுமா?

அன்றும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குழப்பம்... 2000-ஆம் ஆண்டில் என்ன நடந்தது தெரியுமா?

webteam

வாக்கு எண்ணிக்கை தாமதமாவதும், தபால் வாக்குகள் முக்கியத்துவம் பெறுவதும், தோல்வியை ஏற்காமல் எதிர்தரப்பு வேட்பாளர் நீதிமன்றத்தை நாடுவதும் இது முதல் முறையல்ல. ஏற்கெனவே கடந்த 2000-ஆவது ஆண்டில் இதுபோன்ற நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

ஒரு புறம் குடியரசுக் கட்சி சார்பில் ஜார்ஜ் டபிள்யூ புஷ் மறுபுறம் ஜனநாயகக் கட்சி சார்பில் அல் கோர் அமெரிக்க அதிபர் பதவிக்காக 2000-ஆவது ஆண்டில் போட்டியிட்டார்கள். பல்வேறு காரணங்களுக்காக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட பரபரப்பான தேர்தலாக அது அமையப் போகிறது என்பது தேர்தல் நாள் வரைக்கும் யாரும் கணிக்கவில்லை. தேர்தல் நாளான நவம்பர் மாலை 7-ஆம் தேதி இரவில், முக்கிய மாநிலமான ஃபுளோரிடாவில் அல் கோர் வெற்றி பெற்றதாக சிஎன்என், ஃபாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட பல ஊடகங்கள் அறிவித்தன.

ஃபுளோரிடாவில் வென்றால் அதிபர் தேர்தலில் வெற்றி என்ற நிலையில், அல்கோரே அதிபர் என்று மக்கள் முடிவுக்கு வந்தார்கள். ஆனால் சில மணி நேரங்களில் வாக்கு எண்ணிக்கையில் ஜார்ஜ் புஷ் முந்துவதாக முடிவுகள் வெளியாகத் தொடங்கின. வாக்கு வித்தியாசம் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. செய்திகள் மாறின. ஊடகங்கள் ஜார்ஜ் புஷ்ஷே அதிபர் என்று கூறின. அல் கோர் தோல்வியை ஒப்புக் கொண்டார். அதன் பிறகுதான் அதிரடித் திருப்பம் தொடங்கியது.

புளோரிடா மாநிலத்தில் ஜனநாயகக் கட்சி செல்வாக்கு மிகுந்த பகுதிகளின் முடிவுகள் வெளியானபோது, இரு வேட்பாளர்களுக்கும் இடையேயான வித்தியாசம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அல் கோரை விட ஜார்ஜ் புஷ்ஷுக்கு சுமார் 200 வாக்குகளே அதிகமாகக் கிடைத்திருந்தன. முன்னதாக தோல்வியை ஒப்புக்கொண்ட அல் கோர், தனது நிலைப்பாட்டை மாற்றினார். மறு வாக்கு எண்ணிக்கை கோரி நீதிமன்றத்தை நாடினார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு 537 வாக்குகள் வித்தியாசத்தில் புஷ் வென்றதாக புளோரிடா தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதையும் அல் கோர் ஏற்கவில்லை.

புளோரிடா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தை புஷ் நாடினார். அமெரிக்க தேர்தல் நடைமுறைப்படி டிசம்பர் மாதம் 12-ஆம் தேதிக்குள் ஒவ்வொரு மாநிலமும் முடிவை அறிவித்தாக வேண்டும்.

கடைசி சில மணி நேரங்கள் இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கையை உச்ச நீதிமன்றம் நிறுத்தியது. வேறு எந்த வாய்ப்பும் இல்லாமல் போகவே அல்-கோர் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. தேசிய அளவில் புஷ் 271 தேர்தல் சபை வாக்குகளையும், அல் - கோர் 266 தேர்தல் சபை வாக்குகளையும் பெற்றிருந்தார்கள். தேவையைவிட ஒரேயொரு வாக்கு அதிகம் பெற்றிருந்த புஷ் அடுத்த தேர்தலிலும் வென்று 8 ஆண்டுகளுக்கு அதிபராக இருந்தார். வர்த்தக மையத் தாக்குதல், ஈராக், ஆப்கானிஸ்தான் மீதான யுத்தம், சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டது, பொருளாதாரப் பெருமந்தம் என பல முக்கியமான நிகழ்வுகளை இந்தக் காலகட்டத்தில் நடந்திருக்கிறது.