உலகம்

உலகளாவிய தலைமைப் பதவிக்கான விருதுக்கு சுந்தர் பிச்சை தேர்வு

உலகளாவிய தலைமைப் பதவிக்கான விருதுக்கு சுந்தர் பிச்சை தேர்வு

webteam

உலகளாவிய தலைமைப் பதவிக்கான விருதுக்கு, சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கும் கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரபல தேடுப்பொறி நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆகிறது. இந்த நான்கு ஆண்டுகளில் கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சியில், சுந்தர்பிச்சையின் பங்கு மிகப்பெரியது. சமீபத்தில் கூகுள் நிறுவனம் மீது எழுந்த புகார் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற விசாரணை குழு முன் சுந்தர்பிச்சை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது சுந்தர்பிச்சையிடம் சுமார் மூன்றரை மணி நேரம் கடுமையான கேள்விகளை முன்வைத்தனர் விசாரணைக் குழுவினர். இயல்பில் அதிகம் பேச தயங்குபவராக அறியப்படும் சுந்தர் பிச்சை, அவரது நிறுவனம் குறித்து மிகவும் மோசமான விமர்சனத்தை எதிர்கொண்டார். மேலும் எந்தவித தயக்கமும் இல்லாமல், மிகவும் அமைதியாக தனது பதிலை வழங்கினார். இது உலக அளவில் மிகப்பெரிய கவனம் பெற்றது. 

இந்நிலையில் உலகளாவிய தலைமைப் பதவிக்கான விருதுக்கு சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடன்  அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கின் தலைவர் அடினா ஃப்ரைட் மேனும் அந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை மையமாகக் கொண்டு இயங்கிவரும் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில், சுந்தர் பிச்சை மற்றும் அடினா ப்ரைட் மேனை இந்த விருதுக்கு தேர்வு செய்துள்ளது. 2019 ஆண்டுக்கான உலகளாவிய தலைமைப் பதவிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இருவருக்கும் அடுத்த வாரம் நடைபெ‌ற உள்ள உச்சி மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.  கூகுள் மற்றும் நாஸ்டாக் நிறுவனங்கள், தொழில்நுட்பத் துறைக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி இந்த விருது அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து, சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கும் கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை பெற்றவர் என்ற புகழுக்கு உரியவர் சுந்தர்பிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.