உலகம்

"என்ன அடிப்படையில் பணி நீக்கம் செஞ்சீங்க?"-LinkedIn மூலம் Google முன்னாள் ஊழியர்கள் கேள்வி

"என்ன அடிப்படையில் பணி நீக்கம் செஞ்சீங்க?"-LinkedIn மூலம் Google முன்னாள் ஊழியர்கள் கேள்வி

webteam

கூகுள் நிறுனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட இந்தியர்கள் பலரும் தங்களது கருத்துகளை வலைதளம் ஒன்றில் பதிவிட்டு வருகின்றனர்.

உலகின் முன்னணி நிறுவனங்களான மெட்டா, ட்விட்டர், அமேசான், மைக்ரோசாப்ஃட், டிஸ்னி, கூகுள் ஆகியவை சமீபகாலமாக தனது பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூகுள் நிறுவனம் 12,000 பேரை வேலையிலிருந்து திடீரென நீக்கியது. இதில் இந்தியர்கள் 450 பேரும் அடக்கம். தற்போதுகூட கூகுள் நிறுவனத்தில், அன்றாட ஹவுஸ் கீப்பிங் பணிகளைப் பயன்படுத்தப்பட்டு வந்த ரோபோக்கள் நீக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செலவுகளைக் குறைக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிறுவனங்கள் பதிலளித்துள்ளன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தகுதியும், திறமையும் இல்லாதவர்களும், அதிகம் சம்பளம் பெறுபவர்களும்தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகப் பணியாளர்களே தங்களுக்குள் கருத்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர். ஆனால், தற்போது நல்ல தகுதியுடையவர்களும் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

கூகுள் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட பலரும், தங்களுடைய பதிவுகளை LinkedIn என்ற தளத்தில் பதிவு செய்துவருகின்றனர். அதில் அனிமேஷ் என்பவர், “இந்தியாவில் பணிநீக்கம் செய்யப்பட்ட 450க்கும் மேற்பட்டவர்கள் தகுதி அடிப்படையில் பணி நீக்கப்பட்டவர்கள் அல்ல. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களைவிட தற்போது பணியில் இருப்பவர்கள் மிகச் சிறந்தவர் என்று சொல்ல முடியாது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் சிலர் நிறைய தகுதி பெற்றவர்கள். அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது அநீதி” எனத் தெரிவித்துள்ளார்.

இன்னொருவரோ, ”சில நாட்களுக்கு முன்புதான் கூகுள் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டேன். அதுவே, என் கடைசி ஆண்டாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. இந்த பணி நீக்கத்தால் துயருற்றிருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “கூகுளில் பணிபுரிந்த நாட்கள் அனைத்தும் மகிழ்ச்சியானவை. ஒவ்வொரு நாளும் நான் நினைத்ததைவிட சிறப்பாக இருந்தது. என்னுடைய திறமை மற்றும் அனுபவம் மூலம் பல கூகுள் நிர்வாகிகளுடன் பணிபுரிந்துள்ளேன்” என கவலையுடன் பதிவிட்டுள்ளார். இப்படி, பலரும் பலவிதமான கருத்துகளைப் பதிவிட்டு வரும் நிலையில், “உண்மையில் எதனடிப்படையில்தான் கூகுள் பணியாளர்கள் நீக்கப்பட்டனர் என்பதை கூகுள் நிறுவனம் விளக்க வேண்டும்” எனவும் சில பதிவர்கள் பதிவிட்டுள்ளனர்.

- ஜெ.பிரகாஷ்