பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் கடந்த வாரம் நடைபெற்ற மோதல்களை தொடர்ந்து, எல்லைப் பிரச்சினையை தீர்க்க, கூகுள் மேப் வசதியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளன.
20 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில், அதிகாரிகள் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உதவியுடன் எல்லை தாண்டி வந்து கணக்கெடுத்தனர். இதை தொடர்ந்து இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே 2 நாட்களுக்கு முன்பு சண்டை மூண்டது. அதில் பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இந்த எல்லை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் கூகுள் மேப் வசதியை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இரு நாடுகளின் புவியியல் ஆய்வு துறை அதிகாரிகள் கூகுள் வரைபடத்தை பயன்படுத்தபோவதாக பாகிஸ்தானிய பாதுகாப்புத் துறை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் புவியியல் ஆய்வு நடத்தப்படும் என்றும், இரு நாடுகளின் தொழில்நுட்பக் குழுக்கள் ஜி.பி.எஸ் மற்றும் கூகுள் மேப்ஸ் மற்றும் பிற வழிகளைப் பயன்படுத்தி எல்லை கோட்டை முடிவு செய்வார்கள் என்றும் ஆப்கானிஸ்தானின் காந்தகார் மாகாணத்தின் தலைமை காவல் அதிகாரி அப்துல் ரசேக் தெரிவித்துள்ளார்.