கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஏஐ சாட்போட் (AI chatbot) அளித்த தவறான தகவலால், அந்நிறுவனம் 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இழந்துள்ளது.
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் ஓப்பன் ஏஐ (OpenAI) என்ற ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்துள்ளது. இந்த ஓப்பன் ஏஐ நிறுவனம், சாட்ஜிபிடி (ChatGPT) என்ற சாட்போட் ஒன்றை கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. இது, அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் உலகளவில் அதிக பயனர்களைக் கவர்ந்துள்ளதுடன், டிரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்தது. காரணம், கூகுளில் ஒரு விஷயத்தைத் தேடி தகவல்களைத் திரட்டுவது போன்று இந்த சாட்ஜிபிடி மூலமும் பல தகவல்களைத் திரட்ட முடியும். பொதுவாக இவ்விரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், கூகுளைவிட, சாட்ஜிபிடி ஒரேநேரத்தில் பல தகவல்களை தந்துவிடும் என்பதுதான்.
இதையடுத்துத்தான் இதற்குப் போட்டியாக கூகுள் நிறுவனம், பார்ட் (Bard) என்ற சாட்போட்டை உருவாக்கியது. இந்த சாட்போட்டிற்கான விளம்பர வீடியோவை கூகுள் வெளியிட்ட நிலையில், பார்ட் சாட்போட் அளித்த பதில்கள் தவறாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. செய்திகளின்படி ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி குறித்த கேள்வி ஒன்றுக்கு, “பூமியின் சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரு கிரகத்தின் படத்தை முதன்முதலில் எடுத்தது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி” என பார்ட் சாட்போட் பதிலளித்ததாகவும், ஆனால் அதற்குச் சரியான விடை, `2004இல் ஐரோப்பிய தெற்கு கண்காணிப்பகத்தின் மிகப்பெரிய தொலைநோக்கிதான் அந்தப் படத்தை முதன்முதலில் எடுத்தது. இதை நாசா உறுதி செய்துள்ளது’ என சொல்லப்பட்டது. இதையடுத்தே, பார்ட் சாட்போட் தவறான பதிலளித்துள்ளது என செய்திகள் வைரலாக தொடங்கியது.
இதனால், `கூகுள் நிறுவனத்தின் சாட்போட்டே தவறான தகவல்களை வழங்குகின்றன’ என்ற கருத்துகளும் சமூக வலைதளங்களில் வைரலாகியதுடன், மைக்ரோசாஃப்ட்டின் சாட்ஜிபிடியும் பிரபலமானது. இதையடுத்து, கூகுள் பங்கு விலை ஒரேநாளில் 9 சதவிகிதம் சரிந்தது. இந்த சரிவால், கூகுள் நிறுவனம் 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இழந்துள்ளது. மேலும் கூகுள் நிறுவனத்தின் இந்த சரிவால், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்கு விலையோ 3 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, வருங்காலங்களில் சாட்ஜிபிடியின் தாக்கம் உலகளவில் கவனம் ஈர்க்கும் என்று சொல்லப்படுகிறது.