கூகுள் நிறுவன முன்னாள் ஊழியர் ஒருவர், அந்நிறுவனத்தின் பெண் அதிகாரி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தில் சமையல் பிரிவில் மூத்த நிர்வாகியாக பணியாற்றியவர் ரியான் ஓலோஹன். அந்த நிறுவனத்தில் புரோகிராமிங் மீடியா இயக்குநராக பணியாற்றிய சக பெண் உயர் அதிகாரி தன்னிடம் உறவுகொள்ள முயன்றதாகவும், அதை நிராகரித்ததாலேயே தன்னை கூகுள் பணிநீக்கம் செய்துள்ளதாகவும் கூறி அந்த நிறுவனம் மீது தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார், ரியான். இந்த சம்பவம் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மன்ஹாட்டனில் உள்ள செல்சியாவில் நடைபெற்றதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார். பாலியல் துன்புறுத்தல், இனப் பாகுபாடு மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அலுவலக இரவு உணவு விஷயமாக அனைவரும் உணவகம் ஒன்றுக்குச் சென்றபோது, அந்த பெண் அதிகாரி, ’உனக்கு என் போன்ற பெண்களை அதிகம் பிடிக்கும் எனத் தெரியும்’ என்று சொல்லி தன்னை பின்பக்கத்திலிருந்து கட்டிப்பிடித்ததாக அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். அப்போது பலரும் மது மயக்கத்தில் இருந்தனர். இதையடுத்து அங்கிருந்த வெளியேறிய தாம், இந்த சம்பவம் குறித்து பின்னர் மனிதவளத் துறையிடம் சொல்லியும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்துத்தான், ’தாம் அனைவருடனும் இணைந்து வேலை செய்யவில்லை என்ற காரணத்தைச் சொல்லி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலையில் இருந்து நீக்கினர்” என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். அந்தச் சமயத்தில் பெண் ஒருவர் இது போன்று பாதிக்கப்பட்டிருந்தால் உடனே நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்று மனிதவளத் துறையையும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ரியான் ஓலோஹன்னுக்கு திருமணமாகி 7 குழந்தைகள் இருப்பதாகவும், கூகுள் நிறுவனத்தில் அவர் 16 ஆண்டுகள் வேலை பார்த்ததாகவும் சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில், அந்த பெண் அதிகாரி இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். இது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு என்றும், வேலையை விட்டு நீக்கிய அதிருப்தியில் அந்த நபர் இப்படி பொய்யாக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் அந்த பெண் அதிகாரி தெரிவித்துள்ளார். வழக்கின்போது, தாம் ஆதாரங்களை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் அந்தப் பெண் அதிகாரி தெரிவித்துள்ளார். உலகமெங்கும் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துவந்த வேளையில், கூகுள் நிறுவனமும் தன்னுடைய பணியாளர்களை வேலையில் நீக்கியது குறிப்பிடத்தக்கது.