கூகுள் புதிய தலைமுறை
உலகம்

பைத்தான் குழுவினர் பணிநீக்கம்.. மீண்டும் களத்தில் குதித்த கூகுள்.. குடும்பத்தினர் அதிர்ச்சி!

கூகுள் நிறுவனம், தற்போது பைத்தான் குழுவில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு தொழில்நுட்ப நிறுவனங்கள் பல பொருளாதாரச் சரிவைச் சந்தித்தன. இதையடுத்து, அமேசான் மற்றும் கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தொடர்ச்சியாக செலவைக் குறைக்கும் வகையில் பணியாளர்களை பணிநீக்கம் செய்தன. அது, எதிர்காலத்தில் தொடரும் எனவும் எச்சரித்திருந்தன. தற்போது தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிகரிக்கும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் காரணமாக, மீண்டும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.

கூகுள்

அந்தவகையில் கூகுள் நிறுவனம், தற்போது பைத்தான் (python) குழுவில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பைத்தான் என்பது நிரலாக்க மொழி (புரோகிராமிங் லேங்குவேஜ்). கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டது முதலே பைத்தான் குழுவினர் கூகுளில் பங்களிப்பு செய்துவந்தனர். தற்போது அந்தக் குழுவில் அனைவரையும் கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. அதிக ஊதியத்தில் இருப்பதால், பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்துவிட்டு, குறைந்த ஊதிய விகிதத்தில் பணியாளர்களை எடுக்கும் நோக்கத்துக்காக, கூகுள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ’lover’ பட பாணி|தினமும் 100 முறை போன் செய்த காதலி.. டார்ச்சர் தாங்க முடியாமல் போலீஸிடம் ஓடிய காதலன்!

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கூகுள் நிறுவனம் கடந்த சில நாள்களாகவே தனது நிறுவனத்தின் ஆட்குறைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் பொறியாளர்கள் குழுவில் உள்ள ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவருகிறது. முன்னதாக, கடந்த ஜனவரி மாத இறுதியில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பணி நீக்கத்திற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு ஊழியர்களை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கூகுள் சுந்தர் பிச்சை

இதுகுறித்து அப்போது அவர் ஊழியர்களுக்கு அனுப்பியிருந்த மெயிலில், ’இந்த ஆண்டு பெரிய இலக்குகளை அடைய முக்கியமான விஷயங்களில் முதலீடு செய்ய இருப்பதால், மேலும் பணி நீக்கங்கள் நிகழக்கூடும். இந்தப் பணி நீக்கங்கள் கடந்த ஆண்டு செய்யப்பட்ட 12,000 பணிநீக்கத்தைப்போல விரிவாக இருக்காது. அனைத்து டீம்களிலும் இந்த பணி நீக்கங்கள் நடைபெறாவிட்டாலும், ஊழியர்கள் தங்களது சக ஊழியர்கள் மற்றும் அணிகள் மாற்றங்களைச் சந்திப்பதைப் பார்ப்பது கடினமாக இருக்கும்’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எந்தெந்த பிரிவுகள், எத்தனை ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால், தற்போது கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் கொஞ்சகொஞ்சமாக நீக்கப்பட்டு வருவது அவர்களுடைய குடும்பத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதையும் படிக்க: வேட்பு மனு வாபஸ்.. பாஜகவில் ஐக்கியம்.. ஷாக் கொடுத்த காங். வேட்பாளர்.. இந்தூரிலும் பாஜக வெற்றி?