பாகிஸ்தான் எக்ஸ் தளம்
உலகம்

பாகிஸ்தான் | ஆஃபர் விலையில் திறக்கப்பட்ட மால்.. அரை மணிநேரத்தில் சூறையாடிய பொதுமக்கள்.. #ViralVideo

Prakash J

அண்டைநாடான பாகிஸ்தான் கடந்த சில மாதங்களாகவே பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. இதன் காரணமாக, வரலாறு காணாத அளவுக்கு அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் வணிகவளாகத்தின் திறப்பு விழா ஒன்றில் குவிந்த மக்கள், அங்குள்ள பொருட்களைக் கொள்ளையடித்தும், சேதப்படுத்தியும் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள குலிஸ்தான்-இ-ஜோஹர் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி, புதிதாக ‘டிரீம் பஜார்’ என்ற வணிகவளாக திறப்பு விழாவுக்கு விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. வெளிநாட்டில் பணிபுரியும் பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட தொழிலதிபர், மக்களுக்கு குறைந்த விலையில் பொருள்களை கொடுப்பதற்காக இந்த வணிகவளாகத்தை தொடங்கியிருந்தார்.

இதனால், பொருட்களைப் போட்டிபோட்டு வாங்குவதற்கு ஏதுவாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திறப்பு விழா அன்று குவிந்துள்ளனர். மாலை 3 மணிக்கு வணிக வளாகம் திறக்கப்பட்டவுடன், மக்கள் முந்தியடித்து கடைக்குள் செல்ல முயற்சித்துள்ளனர். இதனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத பாதுகாவலர்கள், கதவுகளை அடைத்துள்ளனர்.

இருப்பினும், வணிகவளாகத்தின் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த மக்கள், அங்குள்ள அனைத்துப் பொருள்களையும் சூறையாடிச் சென்றனர். வெறும் அரைமணி நேரத்தில் மொத்த கடையையும் சூறையாடிய மக்கள், கடையின் மற்ற பொருள்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க: திடீரென உயிரிழந்த ‘ரஷ்ய உளவாளி’ ஹவால்டிமிர் திமிங்கலம்.. விசாரணை நடத்த முடிவு.. பிரபலமானது எப்படி?

இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத வணிகவளாக நிறுவனத்தினர் பாகிஸ்தான் ராணுவத்தை உதவிக்கு அழைத்தபோதிலும், அவர்கள் வருவதற்குள் மக்கள் கடையை சூறையாடிச் சென்றனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தக் காட்சிகளைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பயனர் ஒருவர், “யாராவது நமக்கு நல்லது செய்ய முயற்சிக்கும்போது, ​​​​நன்றியுடன் இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அவற்றைக் கொள்ளையடிக்கக் கூடாது” எனப் பதிவிட்டுள்ளார். இன்னொருவரோ, ”உள்ளூர் மக்களுக்கு சிறப்புத் தள்ளுபடியை வழங்குவதன் நோக்கம் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், வணிகவளாகம் சூறையாடப்படுவதைத் தடுக்க சிறந்த திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்பது தெளிவாகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பசியில் வாடும் 14 லட்சம் மக்கள்.. உணவுக்காக வனவிலங்களைக் கொல்ல முடிவு.. நமீபியா அரசு அதிரடி!