நடப்பாண்டில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என ஐநாவின் காலநிலை மாற்ற நிறுவனம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை புவியின் சராசரி வெப்பநிலை 1 புள்ளி 45 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் மோசமான நிலையை நோக்கி செல்வதாக கவலை தெரிவித்துள்ள காலநிலை மாற்ற நிறுவனம், வெப்பநிலை அதிகரிப்பால், பனிப்பாறைகள் உருகி, கடல்மட்டத்தின் அளவு உயரும் என்றும் எச்சரித்துள்ளது. இதேநிலை நீடிக்கும் பட்சத்தில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் காலநிலை மாற்றத்தால் வரும் காலங்களில் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஐ.நாவின் காலநிலை மாற்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு பாரீஸ் நகரில் நடந்த காலநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்கள் நீண்டகால வெப்பநிலை அதிகரிப்பை 1 புள்ளி 5 டிகிரி செல்சியஸூக்குள் கட்டுப்படுத்த உறுதிபூண்டனர். மிக ஆபத்தான விளைவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் உடன்படிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.