உலகம் முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாட்களில் சர்வதேச தொழிலாளர் வருமானம் 10.7 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது. அதாவது 3.5 டிரில்லியன் டாலர் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக உலக தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக பணிச்சூழலில் ஏற்பட்ட மாற்றங்களால் வேலை நேரங்களும் குறைந்தன. அதனால் உலக அளவில் தொழிலாளர் வருமானத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக கொரோனா பாதிப்புகள் பற்றிய மதிப்பீட்டு அறிக்கையில் ஐஎல்ஓ சுட்டிக்காட்டியுள்ளது.
2020ம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் 10.7 சதவீதம் வருமானம் குறைந்துள்ளது. இந்த வருமான மதிப்பீட்டில் அரசு மூலம் கிடைக்கும் நிதி ஆதாரங்கள் சேர்க்கப்படவில்லை. முதல் 9 மாதங்களில் ஊரடங்கால் சர்வதேச வேலைநேரங்களிலும் பெரும் இழப்புகள் நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் வருமானம் 15 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் குறைந்துள்ளதாக ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐஎல்ஓ இயக்குனர் கெய் ரெய்டர் தெரிவித்தார்.