கேம்ஸ்டாப் நிறுவனத்தின் தடாலடி வளர்ச்சி மூலம் அமெரிக்காவில் மட்டும் பிரபலமாக இருந்த இந்நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த கேம்ஸ்டாப் (GameStop) நிறுவனம், வீடியோ கேம்கள் மற்றும் அது தொடர்பான பொருள்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்தது. இந்நிறுவனத்தின் பங்கு அமெரிக்க பங்குச்சந்தையில் கடந்த ஆண்டு இறுதியில் 16 அமெரிக்க டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வந்தது.
இதன் காரணமாக கேம்ஸ்டாபை விட்டு அதன் முதலீட்டாளர்கள் வெளியேறியனர். இந்நிலையில், சிறு பங்குச்சந்தை முதலீட்டாளர்களை இணைப்பதற்கு உதவியாக இருக்கும் ரெட்டிட் (Reddit) எனும் மிகவும் பிரபலமான ஆன்லைன் தளத்தில், Wall Streets Bets என்ற பெயரில் சிறு முதலீட்டாளர்கள் கூட்டணியாக இணைந்து கேம்ஸ்டாப் நிறுவனத்தின் பங்குகளை வாங்கத் தொடங்கியது.
அனைத்துப் பங்குகளையும் சிறு முதலீட்டாளர் கூட்டணி வாங்கியதையடுத்து, பங்கின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. இதன் காரணமாக ஜனவரி 21 அன்று 43 டாலருக்கு வர்த்தகமான ஒரு பங்கின் விலை 4 நாள்களில் 347 டாலர் என்ற அளவுக்கு உயர்ந்துவிட்டது. 7.1 கோடி கேம்ஸ்டாப் பங்குகளை 6 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 43,800 கோடி) என்ற அளவுக்கு பெரிய வர்த்தகர்கள் செயற்கையாக பங்குகளை விற்றனர். அத்தனை பங்குகளையும் சிறு முதலீட்டாளர்கள் கூட்டணி வாங்கிவிட்டது.
இதனால் கேம்ஸ்டாப் பங்குகளை முதலில் விற்கத் தொடங்கிய ஹெட்ஜ் நிதி குழுமத்தின் (Hedge Fund Group) வர்த்தகர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்தது போல விலை குறையாமல் எட்டு மடங்கு அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக அதிக விலை கொடுத்து அந்தப் பங்கை வாங்கி தமது கணக்கை முடிக்கும் நிலை ஏற்பட்டது. பங்குச் சந்தையின் நிபந்தனைப்படி விற்ற பங்குகளை வாங்கி நேர் செய்ய வேண்டும்.
இதன் காரணமாக ஹெட்ஜ் நிதி குழுமத்திற்கு 13 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த நிறுவனம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. கேம்ஸ்டாப் நிறுவனத்தின் தடாலடி வளர்ச்சி மூலம் அமெரிக்காவில் மட்டும் பிரபலமாக இருந்த இந்நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. இதன் காரணமாக பல முன்னணி முதலீட்டாளர்களும், நிறுவனத் தலைவர்களும் கேம்ஸ்டாப் நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளதாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதுவரை பெரிய பங்கு தரகு நிறுவனங்கள்தான் இதுபோன்ற திட்டமிட்ட பங்கு பரிவர்த்தனைகளை நடத்தி அதிக லாபம் அடைவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், Wall Streets Bets குழு, கூட்டணி அமைத்து பெரிய பங்கு தரகு நிறுவனத்தை வீழ்த்தியிருப்பது அமெரிக்க பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டெஸ்லா குழுமத்தின் தலைவரான எலான் மஸ்க், கேம்ஸ்டாப் பங்குகளை வாங்கிய சிறு முதலீட்டாளர் குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், செயற்கையாக பங்குகளை விற்க முயன்ற தரகர்களை மறைமுகமாக சாடியுள்ளார். அவர்களுக்கு மரியாதை கொடுக்காதீர்கள் என நெட்டிசன்களை உசுப்பேற்றி இருக்கிறார்.