ஜெர்மனைச் சேர்ந்த பெண் ஒருவர், அந்நாட்டின் எல்லைக்கு அருகிலான கிழக்கு பிரான்சின் ஃபோர்பாக் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி ஜெர்மன் நகர எல்லை போலீசாரைத் தொடர்புகொண்ட அவர், ’தற்போது நான் ஆபத்தில் இருக்கிறேன், தாங்கள் உதவி செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளார். அதன்பேரில், ஜெர்மன் நகர போலீசார் பிரானஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார், அவர் இருந்த விதத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள், “53 வயது நிறைந்த அந்தப் பெண், அரை நிர்வாணக் கோலத்தில், தலை மொட்டையடிக்கப்பட்ட நிலையில் திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டு, உலோகக் கம்பிகளால் மூடப்பட்டிருந்த அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அவரது கைவிரல்களும், கால்களும் உடைக்கப்பட்டிருந்தன. மேலும் உணவின்றி இருந்ததால் அவரது உடலும் பலவீனத்துடன் காணப்பட்டது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். என்றாலும் அவரது நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று சொல்லும் காவல் துறையினர், அவருக்கு நேர்ந்த கொடூரம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில்தான் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
”அந்தப் பெண்ணை அவரது கணவரே. 2011ஆம் ஆண்டு முதல் அறையில் வைத்து அடைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக அந்தப் பெண்ணைச் சித்ரவதை செய்துள்ளார். அவர்கள் இருவருமே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். அந்தப் பெண் கணவனின் சித்ரவதையைத் தாங்க முடியாமல் சத்தம் போடும்போதெல்லாம் அக்கம் பக்கத்தினர் வந்து கேட்டுள்ளனர். அதற்கு அந்தப் பெண்ணின் கணவர், ’தன் மனைவி புற்றுநோயால் அவதியுற்று வருகிறார். அதனால் தாங்க முடியாத வலியால் சத்தம் போடுகிறார்’ எனச் சமாளித்து விடுவாராம். இந்தச் சூழலில்தான் கடந்த 6ஆம் தேதி அவரது கணவரின் செல்போன் அவருக்குக் கிடைத்துள்ளது. அதை வைத்துத்தான் ஜெர்மன் போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார்” என பிரான்ஸ் போலீசார் நடத்திய விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
போலீசார் அக்கம்பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அலிசீயா என்ற பெண், “அந்தப் பெண்ணை நான் இதுவரை பார்த்ததே இல்லை. அவள் வீட்டைவிட்டு ஒருபோதும் வெளியேறியதில்லை. அதேநேரத்தில் அவர் சில சமயங்களில் அலறுவதைக் கேட்டுள்ளேன். அது, அவர் கணவர் சொன்ன நோயால் வந்ததாக இருக்கலாம் என நினைத்துக் கொள்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பெண்ணான எரிகா, ”அவரை, நான் கடைசியாக 10 ஆண்டுகளுக்கு முன்புதான் பார்த்தேன். அவர் இங்கு இல்லாமலோ அல்லது இறந்து போயிருக்கலாம் எனவே எனக்குத் தோன்றியது” எனக் கூறியுள்ளார்.
இப்படி பலவகையில் கொடுமைப்படுத்தப்பட்ட அந்தப் பெண்ணின் கணவனை, நேற்று போலீசார் கைது செய்துள்ளனர். அவர், வேலையில்லாமல் இருந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அந்த கணவர் எழுதி வைத்திருந்த டைரி ஒன்று கிடைத்துள்ளது. அதில், தன் மனைவிக்கு அவர் உணவு கொடுத்த நேரங்களையும் கொடுமைப்படுத்திய செயல்களையும் குறிப்பிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இதை வழக்கறிஞர் உறுதிப்படுத்திவில்லை.