ஜார்ஜ் ஃபிளாய்டு முகநூல்
உலகம்

திரைப்படமாக மாறவுள்ள கருப்பின நாயகனின் வாழ்க்கை வரலாறு!

அமெரிக்காவில் காவலர்களின் வன்முறைக்கு பலியான கருப்பின நாயகனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுகிறது.

PT WEB

2020ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற குற்றச்சாட்டில் ஜார்ஜ் ஃபிளாய்டு என்ற கருப்பினத்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது வெள்ளைக்கார போலீஸ் அதிகாரி ஒருவரின் இரக்கமற்ற மற்றும் இனப்பாகுபாட்டால் உயிரிழந்தார் ஜார்ஜ். ஜார்ஜின் கடைசி நிமிட காட்சிகள் வெளியாகி உலகளவில் பெரும் புயலை கிளப்பியது.

வீடியோவின்படி ஜார்ஜ் காரில் ஏற மறுத்தபோது, ஃபிளாய்டை கீழே தள்ளி கழுத்துப் பகுதியில் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் தனது முழங்காலை வைத்து 5 நிமிடங்கள் அழுத்தியதில் மூச்சுத்திணறி ஜார்ஜ் உயிரிழந்தார். உலகம் முழுவதும் இந்த கொடூரமான வீடியோ காட்சி பரவி பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. கருப்பினத்தவர்களின் வாழ்க்கை முக்கியம் என்ற முழக்கம் ஓங்கியது. இதுதொடர்பான வழக்கில் அமெரிக்க நீதிமன்றம், முன்னாள் காவல்துறை அதிகாரி டெரெக் சாவினுக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

இந்நிலையில், ஜார்ஜ் ஃபிளாய்டின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுகிறது. உலகத்தை மாற்றிய அப்பா (DADDY CHANGED THE WORLD) என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. கிரிகோரி ஆண்டர்சன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்தை, ராடார் பிக்சர்ஸ், 8 குயின்ஸ் மீடியா, நைட் ஃபாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர்களாக ஃபிளாய்டின் மகள் மற்றும் மனைவி பணியாற்ற உள்ளனர். ஒரு கடினமான வாழ்க்கையைக் கொண்ட ஒரு மனித இனம், இனவெறியால் எவ்வாறு தீயில் தள்ளப்பட்டது என்பதை ஜார்ஜ் ஃப்ளாய்டின் வரலாறு உலகிற்கு கற்பிக்கவுள்ளது.