இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் 10வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ஏவுகணை தாக்குதலால் காணும் இடமெல்லாம் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது காஸா நகரம். சேதமடைந்த கட்டடங்களின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்படும் உடல்கள், உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற துடிக்கும் மக்கள் என்றுள்ள காஸாவில், போரால் உணவு, தண்ணீரின்றி தவித்துவரும் மக்களுக்கு தேவையான உணவை அங்குள்ள பொதுமக்களும், தன்னார்வலர்களும் தயாரித்து விநியோகம் செய்து வருகின்றனர்.
போரில் உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனைகளில் வைக்க இடம் இல்லாமல், ஐஸ்கீரிம் வேன்களிலும், குளிர்சாதன வண்டிகளிலும் வைக்க வேண்டிய அவலம் காணப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் செய்வதறியாது தத்தளித்து வரும் காஸா நகர மக்கள், எரிபொருள் நிரப்பும் மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை நிலவுகிறது.
போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனங்கள் எகிப்து - காஸா எல்லையில் உள்ள அல்-அரிஷ் என்ற இடத்தில் குவிந்துள்ளன. இஸ்ரேல் அரசின் அனுமதிக்காக அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஹமாஸ் குழுவினரின் தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேல் மக்களின் உடல்களை அவர்களது உறவினர்கள் இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்தனர். நேசித்தவர்களை பிரிந்த சோகத்தில் அவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியது காண்போரின் நெஞ்சை கணமாக்கியது.
போர் காரணமாக காஸா நகரில் சிக்கித் தவிக்கும் மக்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுமாறு கத்தோலிக்க மதத்தலைவர் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிணை கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்குமாறு ஹமாஸ் குழுவினருக்கு கோரிக்கை விடுத்த போப் பிரான்சிஸ், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவுமாறு உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.