தொடரும் போர் மாதிரி புகைப்படம்
உலகம்

‘ஏன் பிறந்தாய் மகனே..’ கதறிய தாய்.. குழந்தைகளையும் கொன்று குவிக்கும் இஸ்ரேல்!

யுவபுருஷ்

ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்னையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 27 நாட்களாக போர் நீடித்து வருகிறது. முதல் நாள் தாக்குதலை ஹமாஸ் தொடங்கிய நிலையில், ஹமாஸை அழிப்பதாக ஒட்டுமொத்த காஸா மீது கோர தாக்குதலை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல். நாள் ஒன்றுக்கு சுமார் 300 ஏவுகணைகளை காஸா மீது இஸ்ரேல் ராணுவம் ஏவி வருகிறது. மருத்துவமனை, கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் என்று தொடங்கி, அகதிகள் முகாம்களையும் தாக்கி வருகிறது இஸ்ரேல்.

இத்தனை கோர தாக்குதலை ஐநா கண்டித்து வரும் நிலையில், ஹமாஸின் தளபதிகளை குறிவைத்தே தாக்குதலை நடத்துவதாக கூறிவருகிறது இஸ்ரேல். இதுவரை சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இந்த போரில் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. அதில் கொடூரம் என்னவெனில் 3,600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இஸ்ரேலின் தாக்குதலில் பலியாகியுள்ளனர்.

உண்மையை சொல்ல வேண்டுமெனில், காஸாவில் கடந்த ஒரு மாதகாலமாக, மனிதாபிமானமற்ற தாக்குதலே நடத்தப்பட்டு வருகிறது. ஒருமுறை தாக்கியதை சாக்காக வைத்து, தினம் தினம் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதா என்றும் சர்வதேச அளவில் கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன.

இந்நிலையில், இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் சிக்கி உயிருக்கு போராடிய தனது மகனை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்ற தாய், தனது குழந்தைக்காக கதறி அழுதுள்ளார். அவரின் வீடியோ காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. “எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. என் மகன் மட்டும் போதும், அவனை வீட்டுக்கு அழைத்துச்செல்ல வேண்டும். என் உயிரே என்னை விட்டு போகாதே” என்று தாய் கதறி அழுதுள்ளார்.

மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், குழந்தை உயிர் பிழைக்கவில்லை. காஸாவில் தற்போது கொல்லப்பட்டுள்ள இந்த குழந்தைகளின் எண்ணிக்கையானது, ஆண்டு முழுவதும் சர்வதேச அளவில் நடைபெறும் போர்களில் சிக்கி உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம்.