உலகம்

போப் ஆண்டவர் கவலை... உக்ரைனுக்கு குவியும் ராணுவ உதவிகள்... லேட்டஸ்ட் 10 தகவல்கள்

போப் ஆண்டவர் கவலை... உக்ரைனுக்கு குவியும் ராணுவ உதவிகள்... லேட்டஸ்ட் 10 தகவல்கள்

ஜா. ஜாக்சன் சிங்

உக்ரைன் மீதானை போரை நிறுத்தும்படி ரஷ்யாவுக்கு பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில், உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு நிபந்தனையையும் ரஷ்யா விதித்துள்ளது. தாக்குதலை உக்ரைன் ராணுவம் நிறுத்தினால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் தெரிவித்துள்ளார். அடக்குமுறையில் இருந்து உக்ரைன் மீட்கப்பட வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரஷ்யாவுக்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தை மையமாக வைத்து உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் விஷயங்கள் குறித்து இங்கு காண்போம்.

1. ரஷ்ய தூதரை அழைத்துப் பேசினார் போப் ஆண்டவர். வாடிகனில் உள்ள ரஷ்ய தூதரை அழைத்து உக்ரைனில் போர் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்து போப் ஆண்டவர் கேட்டறிந்துள்ளார்.

2. டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தை உக்ரைனில் சிக்கி தவித்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள் முற்றுகையிட உள்ளதால் தூதரகம் அமைந்துள்ள சாந்தி பத் சாலை முழுமையாக மூடல். பாதுகாப்பு அதிகரிப்பு.

3. செர்னோபில் அணு உலையை ரஷ்யா ராணுவம் கைப்பற்றிய பிறகு, அணுக்கதிர் வீச்சு அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உக்ரைன் அணு உலை கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை. உலகில் நடந்த மிகப்பெரிய பேரழிவுகளில் ஒன்றாக செர்னோபில் அணு உலை வெடிப்பு தற்போதும் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

4. ஐ.நா. சபையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்படும் பட்சத்தில், இந்தியா தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். வாக்களிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக ரஷ்யா கருத்து. ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாக இந்தியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

5. தங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்த மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க ரஷ்யா முடிவு. பல மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் இயற்கை எரிவாயு, உணவுப் பொருள்கள், உலோகங்கள் உள்ளிட்ட பல முக்கிய பொருள்களை நம்பிதான் உள்ளது.

6. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், சென்னை சாந்தோம் பகுதியில் அமைந்திருக்கும் ரஷ்ய தூதரகத்திற்கு வெளியில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே போல, ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்திற்கு பாதுகாப்பு இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

7. ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் போர் புரிந்து வரும் சூழலில், அந்நாட்டிற்கு ஏவுகணை அழிப்பு ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்கள் அழிப்பு ஆயுதங்களை வழங்க முன்வந்துள்ளது எஸ்டோனியா. 

8. உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கியது ஸ்வீடன் அரசு. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு நேரடியாக ராணுவ உதவியை செய்யும் முதல் நாடு ஸ்வீடன் என உக்ரைன் அதிபர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

9. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் புரிந்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்.

10. உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கையில் எடுக்குமாறு ரஷ்ய அதிபர் புடின் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் எளிய தீர்வு எட்ட முடியும் என அவர் கூறியுள்ளார்.