ரெமி லூசிடி என்ற இயற்பெயர் கொண்ட ரெமி எனிக்மா (30) என்பவர் ஹாங்காங்கில் உள்ள 721 அடி ட்ரெகுண்டர் கோபுரத்தின் 68 வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஹாங்காங் அதிகாரிகள் கூறுகையில், கடந்த வியாழன் அன்று மாலை, லூசிடி ட்ரெகுண்டர் டவர் வளாகத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்த காவலரிடம் தான் 40 ஆவது மாடியில் இருக்கும் தனது நண்பரை காண வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். காவலர் 40 ஆவது மாடிக்கு தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்துக் கொண்டிருந்த போதே, லூசிடி லிப்டில் ஏறி 49 ஆவது மாடிக்கு சென்றுள்ளார்.
சிசிடிவி காட்சிகளில், லூசிடி லிப்டில் 49 ஆவது மாடிக்கு சென்றதும், அங்கிருந்து படிகட்டுகள் வழியாக 68 ஆவது மாடிக்கு அதாவது கட்டடத்தின் உச்சிக்கு சென்றதும் பதிவாகியுள்ளது. இது குறித்து லூசிடியை பின் தொடர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் மாடிக்கு செல்லும் போது மாடிக்கு செல்லும் ஹட்ச் திறந்திருந்ததாகவும் அங்கு எவரையும் காணவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
லூசிடி பயன்படுத்திய கேமராவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில் அவர் மேற்கொண்ட சாகசங்கள் புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் இருந்துள்ளது. ரெமி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அங்கிருக்கும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கும் நிலையில் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், லூசிடி கடைசியாக 7.38 மணியளவில் உயிருடன் காணப்பட்டதாகவும் அவர் கட்டடத்தின் பெண்ட் ஹவுஸின் ஜன்னலைத் தட்டியதாகவும் அக்குடியிருப்பில் இருந்த பணிப்பெண் தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். லூசிடி பெண்ட் ஹவுசின் வெளியே சிக்கி இருந்த போது, கீழே விழுவதற்கு முன் உதவி வேண்டி ஜன்னலைத் தட்டியிருக்கலாம் காவல்துறையினர் நம்புகின்றனர்.
விடுமுறையை கழிப்பதற்காக ஹாங்காங் வந்த லூசிடி அங்கு ஓர் விடுதியில் தங்கி இருந்துள்ளார். விடுதியின் உரிமையாளர் குர்ஜித் கவுர், லூசிடி குறித்து கூறுகையில், அடக்கமான இளைஞர் ஆரோக்கியமான உடலுடன் சிரித்த முகமாகவே இருப்பார் என்றும் அவர் இறப்பு செய்தி கேட்டு மிக வருத்தமாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
விடுதியில் பணிபுரியும் ஊழியர் இது குறித்து கூறுகையில், தான் மலையேற செல்வதாக லூசிடி தெரிவித்ததாக கூறினார். சமூக வலைதளத்தில் அவரைப் பின் தொடருபவர்கள் அவரின் இறப்புச் செய்தி தெரிந்ததும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.