உலகம்

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா பாதிப்பு

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா பாதிப்பு

Veeramani

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் ஒருவாரம் தனிமைப்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு கொரோனாவின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் தோன்றிய பின்னர், அவர் இன்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய விதிமுறைகளின்படி, அவர் இன்னும் ஏழு நாட்களுக்கு  தனிமைப்படுத்தப்படுவார், அவர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட இடத்திலிருந்தே பணியாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள் வரிசையில் தற்போது  பிரான்ஸ் அதிபரும் இடம்பெற்றுள்ளார்.

இந்த வார தொடக்கத்தில் பிரான்ஸ் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை எதிர்த்துப் போராடுவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தியது. ஆனால் தொற்று விகிதங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. தற்போது பிரான்ஸில் வைரஸ் பரவுவதைத் தடுக்க இரவு 8 மணி  முதல் ஊரடங்கு உத்தரவு உள்ளது. அதே நேரத்தில் உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து பிரான்ஸில் கொரோனா வைரஸால் 59,300-க்கும் மேற்பட்டோர்  இறந்துள்ளதாக அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று மட்டும் 17 ஆயிரம் பேர் பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.