உலகம்

நடுவானில் அசந்து தூங்கிய விமானி: தீவிரவாதிகள் கடத்தியதாக பதறிப்போன அதிகாரிகள்!

நடுவானில் அசந்து தூங்கிய விமானி: தீவிரவாதிகள் கடத்தியதாக பதறிப்போன அதிகாரிகள்!

ச. முத்துகிருஷ்ணன்

இத்தாலி நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தில் நடுவானில் விமானி அசந்து தூங்கியதால் தீவிரவாதிகள் விமானத்தை கடத்திவிட்டார்களோ என கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் பதறிப்போயினர்.

நியூயார்க்கில் இருந்து ரோம் நோக்கி வந்துகொண்டிருந்த ஐடிஏ ஏர்லைன்ஸ் ஏஇசட்609 பிரான்ஸ் மீது பறந்துகொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அதிகார்கள் விமானத்தை தொடர்புகொள்ள முயற்சித்தபோதும், விமானியிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. தீவிரவாதிகள் விமானத்தை கடத்திவிட்டார்களோ என பதறிப்போன அதிகாரிகள் மேலதிகாரிகளுக்கு தகவலை அனுப்பினர்.

அதைத்தொடர்ந்து பிரெஞ்சு அதிகாரிகள் இரண்டு போர் விமானங்களை கண்காணிப்புக்கு தயார் செய்தனர். மேலும், பிரான்ஸ் அதிகாரிகள் இத்தாலி அதிகாரிகளுக்கு தீவிரவாத கடத்தல் நடக்கலாம் என்றும் எச்சரித்தனர். இந்த களேபரங்களுக்கு மத்தியில் சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு விமானி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்டார்.

கடத்தல் எதுவும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்த அதிகாரிகள் 10 நிமிடங்கள் சிக்னல் ஏன் நின்று போனது என்ற விசாரணையில் இறங்கினர். உபகரணங்களில் கோளாறுகள் ஏற்பட்டதால், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று விமானி கூறினார். ஆனால் தீவிர விசாரணைக்கு பின் நடுவானில் விமானி உறங்கிய அதிர்ச்சி உண்மையை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

நடுவானில் ஆட்டோபைலட் வசதியில் விமானம் இயங்கிக் கொண்டிருந்தபோது, விமானி தூங்கியுள்ளார். இதன் விளைவாகவே தகவல் தொடர்பு முடக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பொறுப்பின்றி செயல்பட்ட விமானியை ஏர்லைன்ஸ் நிறுவனம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. “விமானம் ஆட்டோபைலட் வசதியில் சாதாரண வேகத்தில் பறந்தது. விமானம் அதன் பாதையில் இருந்து ஒருபோதும் திசைதிருப்பப்படவில்லை. பயணிகளின் பாதுகாப்பு ஒருபோதும் சமரசம் செய்யப்படவில்லை” என்று விமான செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.